பக்கம் எண் :

404யுத்த காண்டம் 

                                       இந்திரசித்தன் மொழி
 

8301.‘இன்று   ஒருபொழுது  தாழ்த்து,  என்  இகல்  பெருஞ்
                                      சிரமம் நீங்கி,
சென்று, ஒரு கணத்தில், நாளை, நான்முகன் படைத்த தெய்வ
வென்றி வெம் படையினால், உன் மனத் துயர் மீட்பென்’
                                         என்றான்;
‘நன்று’ என, அரக்கன் போய், தன் நளிமலர்க் கோயில்
                                          புக்கான்.
 

(இந்திரசித்தன்   இராவணனைப் பார்த்து)   இன்று ஒரு பொழுது
தாழ்த்து
 - இன்று  ஒரு  நாள்  காலம் தாழ்த்தி; என் இகல் பெரும்
சிரமம்  நீக்கி
-  எனக்குப்  போரினால் ஏற்பட்ட பெரு வருத்தத்தை
நீக்கிக்கொண்டு;  நாளை - நாளைக்கு; ஒரு கணத்தில் சென்று - ஒரு
கண நேரத்தில் (போர்க்களம்) சென்று; நான்முகன் படைத்த - பிரமன்
உருவாக்கிப்   படைத்த;  தெய்வ  -  தெய்வத்தன்மை  பொருந்திய;
வென்றி வெம்  படையினால் - வெற்றிக்கு உரிய கொடிய கணையால்;
உன் மனத்துயர்  மீட்பென் என்றான்  - (பகைவர்களைக் கொன்று)
உன்  மனத்தில்  ஏற்பட்டுள்ள  துன்பத்தைப்  போக்குவேன்  என்று
கூறினான்; நன்று  என அரக்கன் போய் - நல்லது என்று கூறிவிட்டு
அரக்கனாகிய  (இராவணன்)  போய்த்;  தன்   நளிமலர்க்  கோயில்
புக்கான் 
-  தன்னுடைய    சிறந்த    மலர்   மாலைகளால் அழகு
படுத்தப்பட்டிருந்த அரண்மனைக்குச் சென்று சேர்ந்தான்.
 
 

                                                (300)