அழிந்திலர்; என்றிலை - (என்று) சொல்லவில்லை (என்பதற்காக); நாசியை வெட்டுதி - (போர்க்களம் சென்றவர்களுடைய) மூக்குகளை எல்லாம் வெட்டி விடுவாயோ; என்று பகர்ந்தான் - என்று (மாலி இராவணனுக்குச்) சொன்னான். |
(15) |
மாபெரும் பக்கனும் புகைக்கண்ணனும் பேசுதல் |
8317. | ஆறினன் என்பது அறிந்தனர், அன்னார் தேறினர், அன்னது சிந்தை உணர்ந்தார், சீறிய நெஞ்சினர், செங் கணர், ஒன்றோ கூறினர்? தம் நிலை செய்கை குறித்தார்: |
ஆறினன் என்பது அறிந்தனர் - (மாலி கூறிய சொற்களால் இராவணன்) சினம் தணிந்தனன் என்பதை அறிந்தவர்களான; அன்னார் - (அந்த மாபக்கன், புகை நிறக்கண்ணன் ஆகிய) இருவரும்; தேறினர் - (தண்டனை கிடைக்குமோ என்ற) மனக்கலக்கம் தீர்ந்து தெளிந்து; அன்னது சிந்தை உணர்ந்தார் - (அவனது மனநிலையைத்) தெளிவாக மனத்தில் உணர்ந்தவர்களாகி; சீறிய நெஞ்சினர் - சினம் கொண்ட நெஞ்சினை உடையராய்; செங்கணர் - சிவந்த கண்களை உடையவராய்; தம் நிலை - தம்முடைய நிலையினையும்; செய்கை குறித்தார் - செய்கையையும் குறித்தவர்களாகி; ஒன்றோ கூறினர் - ஒன்றை மட்டுமா கூறினார்கள்; (பல கூறினர் என்றபடி.) |
(16) |
8318. | ‘உன் மகன் ஒல்கி ஒதுங்கினன் அன்றோ? மின் நகு வானிடை ஏக, விரைந்தான், அன்னதின் மாயை இயற்றி அகன்றான்; இந் நகர் எய்தினன், உய்ந்தனன்-எந்தாய்! |
எந்தாய் - எங்களுக்குத் தந்தை போன்றவனே!; உன் மகன் - உனக்கு மகனாகிய (இந்திரசித்தன்); ஒல்கி ஒதுங்கினன் - (போரினால்) தளர்ந்து ஒதுங்கினான்; அன்றோ - அது மாத்திரமா? மின்நகு வானிடைஏக விரைந்தான் - மின்னல்கள் விளங்குகின்ற ஆகாயத்தினிடத்தில் விரைந்து சென்று; அன்னதின் மாயை இயற்றி அகன்றான் - அங்கிருந்து மாயைச் செயலைச் செய்து நீங்கி; இந்நகர் எய்தினன் - இந்த (இலங்கை) நகரை வந்தடைந்து; உய்ந்தனன் - உயிர் பிழைத்தான். |
(17) |