8319. | ‘இப் பகல், அன்றுஎனின் நாளையின், அல்லால், முப் பகல் தீர்கிலம்; ஆவி முடிப்போம், வெப்பு அகலா எரி வெந் தழல் வெந்த செப்பு அகல் வெண்ணெயின்-நோன்மை தெரிந்தோய்!
| நோன்மை தெரிந்தோய் - வலிமையின் தன்மையை அறிந்தவனே! இப்பகல் - (நாங்கள்) இப்பகல் ஒன்றில்; அன்று எனின் - இல்லை என்றால்; நாளையின் - நாளை; அல்லால் - அல்லாமல்; முப்பகல் தீர்கிலம் - மூன்றாம் நாள் போகவிடோம்; (தவறாமல்) வெப்பு அகலா - வெம்மை நீங்காத; எரி வெந்தழல் வெந்த - எரிகின்ற வெப்பமுடைய தீயில் வெந்த; செப்பு அகல் வெண்ணெயின் - செம்பு விளக்கில் (ஊற்றப்பட்ட) வெண்ணெயைப் போல; ஆவி முடிப்போம் - பகைவர்களின் உயிரை முடிப்போம் (என்றனர்).
| (18)
| 8320. | ‘விட்டனை எம்மை, விடுத்து, இனி, வெம் போர் பட்டனர் ஒன்று, படுத்தனர் ஒன்றோ, கெட்டனர் என்பது கேளலை’ என்னா, ஒட்டினர், ஆவி முடிக்க உவந்தார்.
| எம்மை விட்டனை - எங்களைப் போருக்கு அனுப்பி; விடுத்து - விடுத்த பின்பு; இனி வெம்போர் பட்டனர் ஒன்று - இனி (இவர்கள்) கொடிய போர் செய்து இறந்தார்கள் என்பது ஒன்று, படுத்தனர் ஒன்றோ - (பகைவர்களை) அழித்தனர் என்பது ஒன்று (ஆகிய இவ்இரண்டில் ஒன்றைத் தவிர); கெட்டனர் என்பது கேளலை என்னா - போரில் தோற்று விட்டார்கள் என்ற சொல்லைக் கேட்க மாட்டாய் என்று; ஆவி முடிக்க உவந்தார் ஒட்டினர் - உயிரைக் கொடுக்க மகிழ்ச்சி கொண்டவர்களாய்ச் சபதம் செய்தனர்.
| (19)
| இராவணன் இருவருடன் பெரும் படை அனுப்பல்
| 8321. | அன்னவர் தம்மொடும் ஐ-இரு வெள்ளம் மின்னு படைக் கை அரக்கரை விட்டான்; சொன்ன தொகைக்கு அமை யானை, சுடர்த் தேர், துன்னு வயப் பரியோடு தொகுத்தான். |
|
|
|