மயில்; வரையின் மேல் திரிவன போன்றார் - மலையின் மீது சுற்றித் திரிவன ஒத்தார்கள். |
(64) |
8366. | சிலவர்-தம் பெருங் கணவர்தம் செருத் தொழில் சினத்தால், பலரும், வாய் மடித்து, உயிர் துறந்தார்களைப் பார்த்தார், ‘அலைவு இல் வெள் எயிற்றால் இதழ் மறைத்துளது, அயலாள் கலவியின் குறி காண்டும் என்று ஆம்’ எனக் கனன்றார். |
சிலவர் - சில (அரக்க) மகளிர்; தம் பெரும் கணவர் - தங்களுடைய பெருமை மிக்க கணவர்கள்; பலரும் - பல பேர்களும்; தம் செருத்தொழில் சினத்தால் - (தங்களுடைய) போர்த் தொழிலில் (மூண்ட பெருஞ்) சினத்தினால்; வாய் மடித்து - வாயை மடித்து (இதழ்களைப் பல்லால் கடித்துக்கொண்டு); உயிர் துறந்தார்களைப் பார்த்தார் - உயிரை விட்டவர்களைப் பார்த்து; அயலாள் கலவியின் குறி - மாற்றாள் கலவிக்காலத்தில் செய்த பற்குறிகளை; அலைவு இல் வெள்ளெயிற்றால் - அசைவு இல்லாத வெண்மையான பற்களினால்; இதழ் மறைத்துளது - இதழில் (செய்யப்பட்ட பற்குறியை) மறைத்துள்ளது; (அதற்குக் காரணம்) காண்டும் என்று ஆம் - நாம் பார்த்து விடுவோம் என்று கருதிப் போலும்; எனக் கனன்றார் - என்று எண்ணிச் சினம் கொண்டார்கள். |
தங்கள் உயிர்த்துணைக்கணவர் இறந்து கிடத்தலைக் கூட நினைக்காமல் அவர்கள் பல்லால் இதழைக் கடித்துக்கொண்டு இருக்கக் காரணம் அயலாள் பற்குறியை மறைக்க என்று கூறியது அம்மகளிருக்குத் தங்கள் கணவன் மீது இருந்த கழி காமத்தைக் காட்டச் சொல்லப்பட்டது போலும் என்க. அவ்வாறு கொள்ளாக்கால் அவலச் சூழலில் வரும் எண்ணமாக இதனைக் கொள்ளுவது சரியாக அமையாது என்பதையும் எண்ணுக. |
(65) |
8367. | நவை செய் வன் தலை இழந்த தம் அன்பரை நணுகி, அவசம் எய்திய மடந்தையர் உருத் தெரிந்து அறியார், |