பக்கம் எண் :

 படைத் தலைவர் வதைப் படலம் 437

      துவசம் அன்ன தம் கூர் உகிர்ப் பெருங் குறி, தோள்மேல்
கவசம் நீக்கினர், கண்டு கண்டு, ஆர் உயிர் கழிந்தார்.*

 

நவை செய் வன்தலை - குற்றம் செய்கிற வலிய தலைகளை; இழந்த
-  போரில்  இழந்து  விட்ட;  தம் அன்பரை அணுகி - தங்களுடைய
கணவன்மாரை  நெருங்கி; உருத்தெரிந்து அறியார் -  (அவர்களுடைய)
உருவத்தை   (அடையாளம்)  தெரிந்து  அறியாதவர்களாய்;    அவசம்
எய்திய  மடந்தையர்
 -  சலிப்பினை அடைந்த பெண்டிர்  (எண்ணிப்
பார்த்த பின்பு); கவசம் நீக்கினர் - (அவர்களுடைய உடல்)  கவசத்தை
நீக்கி;  துவசம்  அன்ன  -  கொடியைப்  போன்ற;  தம் கூர் உகிர்ப்
பெருங்குறி
 -  தங்களுடைய  கூர்மையான  நகத்தால்   செய்யப்பட்ட
பெருங்குறி;  தோள்  மேல்கண்டு கண்டு - (அவர்களுடைய) தோளின்
மீது  இருப்பதைப்  பார்த்துப்  பார்த்து);  ஆர்  உயிர்  கழிந்தார்  -
(தங்களது) அருமையான உயிர் நீங்கினார்கள்.
 

                                                 (66)
 

8368.மாரி ஆக்கிய கண்ணியர், கணவர்தம் வயிரப்
போர் யாக்கைகள் நாடி, அப் பொரு களம் புகுந்தார்,
பேர் யாக்கையின் பிணப் பெருங் குன்றிடைப் பிறந்த
சோரி ஆற்றிடை அழுந்தினர், இன் உயிர் துறந்தார்.*

 

மாரி     ஆக்கிய கண்ணியர் - மழை (போல் கண்ணீர் வடித்து)
ஆக்கிய கண்களை உடையவர்களான (அரக்க மகளிர்); தம்  கணவர் -
தங்கள் கணவன்மாருடைய; வயிரப் போர் யாக்கைகள் நாடி - வயிரம்
(பாய்ந்த)  போர்  (செய்த)  உடல்களைத்  தேடி;  அம் பொரு களம்
புகுந்தார்
- (அந்தப்) போர்க்களத்தின் கண் புகுந்தார்கள்   (அவர்கள்);
பேர்  யாக்கையின்   -   பெரிய   உடம்புகளை   உடைய;  பிணப்
பெருங்குன்றிடை
 - பிணங்களாகிய பெரிய மலையில் இருந்து; பிறந்த
-  தோன்றிய;  சோரி  ஆற்றிடை  அழுந்தினர் -  குருதி  ஆற்றின்
இடையில் அழுந்தி; இன் உயிர் துறந்தார் - (தங்கள்) இனிய உயிரைத்
துறந்தார்கள்.
 

                                                  (67)