அனுமன் புகைநிறக்கண்ணன் போர் |
கலி விருத்தம் |
8369. | வகை நின்று உயர் தாள் நெடு மாருதியும், புகையின் பொரு கண்ணவனும் பொருவார்; மிகை சென்றிலர், பின்றிலர், வென்றிலரால்; சிகை சென்று நிரம்பிய தீ உமிழ்வார். |
வகை நின்று உயர்தாள்- அழகாக ஓங்கி நின்ற கால்களை உடைய; நெடு மாருதியும் - பெருமை உடைய அனுமனும்; புகையின் பொரு கண்ணவனும் பொருவார் - புகையோடு மாறுபடுகிற கண்களை உடையவனும் போரிடுகின்றவர்களாகி; சிகை சென்று நிரம்பிய - கொழுந்து எழுந்து சென்று நிரம்புகிற; தீ உமிழ்வார் - தீயை உமிழ்கின்றவர்களாகி; மிகை சென்றிலர் - (ஒருவருக்கு ஒருவர்) மேம்படுதல் இன்றியும்; பின்றிலர் - பின்னிடுதல் இன்றியும்; வென்றிலரால் - வெல்லுதல் இன்றியும் போர் செய்தனர். |
(68) |
8370. | ஐ-அஞ்சு அழல் வாளி, அழற்கொடியோன், மெய் அஞ்சனை கான்முளை மேனியின்மேல், வை அம் சிலை ஆறு வழங்கினனால், மொய் அஞ்சன மேகம் முனிந்தனையான். |
அழற்கொடியோன் - நெருப்பினும் கொடியவன் ஆகிய புகை நிறக்கண்ணன்; மொய் அஞ்சன மேகம் - சொரிந்த கரு மேகம்; முனிந்தனையான் - சினந்ததனை ஒப்பவனாகி; மெய் அஞ்சனை - உண்மை உள்ள அஞ்சனையின்; கான்முளை மேனியின் மேல் - மகனாகிய (அனுமனின்) உடம்பின் மீது; வை அம்சிலை ஆறு - (தான்) வைத்துள்ள அழகிய வில்லின் வழியாக; ஐ - அஞ்சு அழல் வாளி - இருபத்து ஐந்து நெருப்புப் போன்ற அம்புகளை; வழங்கினனால் - செலுத்தினான். |
(69) |
8371. | பாழிப் புயம் அம்பு உருவப் படலும், வீழிக் கனிபோல் புனல் வீச, வெகுண்டு, ஆழிப் பெருந் தேரை அழித்தனனால்,- ஊழிப் பெயர் கார் நிகர் ஒண் திறலான். |