8376. | ஊரோடு மடுத்து ஒளியோனை உறும் கார் ஓடும்நிறக் கத நாகம் அனான், தேரோடும் எடுத்து, உயர் திண் கையினால், பாரோடும் அடுத்து எறி பண்பிடையே. |
ஊரோடு மடுத்து - ஊர்தல் தொழிலுடன் பொருந்தி; ஒளியோனை உறும் - கதிரவனைச் சேருகின்ற; கார் ஓடும் நிறக் - கருமை ஓடுகிற நிறத்தினை உடைய; கத நாகம் அனான் - சினம் மிக்க (இராகு கேது என்னும்) பாம்புகள் போன்றவனாகிய (அங்கதன்); உயர்திண் கையினால் - (தன்னுடைய) உயர்ந்த வலிமையான கைகளினால்; தேரோடும் எடுத்து - (அந்த மாபக்கனைத்) தேருடன் எடுத்து; பாரோடும் அடுத்து - நிலத்தில் பொருந்தும் படியாக; எறி பண்பிடையே- எறிந்த போது (அடுத்த பாடலில் முடியும்). |
தேரைப் பற்றச் சென்ற அங்கதனுக்குச் சூரியனைப் பற்றச் செல்லும் இராகு கேதுக்கன் உவமையாம். ஊரோடு - ஊர் கோளோடு. ஊர்கோள் - சூரியனைச் சுற்றிய பரிவேடம் வட்டவடிவமாக சூரியனைச் சுற்றி அமைவது. அந்த ஊர் கோளோடு விழுங்கச்செல்லும் நாகம்; தேரோடு மாபக்கனைப் பற்றும் அங்கதனுக்கு உவமையாம் என்பது மகாவித்துவான் மயிலம். வே.சிவசுப்பிரமணியன் கருத்து. |
(75) |
8377. | வில்லைச் செல வீசி, விழுந்து அழியும், எல்லின் பொலி தேரிடை நின்று இழியா, சொல்லின் பிழையாதது ஓர் சூலம், அவன் மல்லின் பொலி மார்பின் வழங்கினனால். |
வில்லைச் செலவீசி - (அந்த மாபக்கன்) தன் வில்லை அப்பால் செல்லும்படி வீசி விட்டு; எல்லின் பொலி - கதிரவன் போல் விளங்குகிற; விழுந்து அழியும் - (மேலிருந்து) கீழே விழுந்து அழிகிற; தேரிடை நின்று இழியா - தேரில் இருந்து இறங்கி; அவன் - அந்த அங்கதனுடைய; மல்லின்பொலி மார்பின் - மற்போர்த் தொழிலால் அழகு விளங்குகின்ற மார்பின்கண்; சொல்லின் பிழையாதன - சாபம் போல் தவறாது பயன் விளைக்கவல்ல; ஓர் சூலம் - ஒப்பற்ற சூலப்படை (ஒன்றை); வழங்கினனால் - செலுத்தினான். |
(76) |