8378. | ‘சூலம் எனின், அன்று; இது தொல்லை வரும் காலம்’ என உன்னு கருத்தினனாய்; ஞாலம் உடையான், அது நாம் அற, ஓர் ஆலம் முக அம்பின் அறுத்தனனால். |
ஞாலம் உடையான் - உலகங்கள் எல்லாம் தன் வடிவாக உடைய (இராமன்); இது - இப்போது வருகின்ற சூலம்; சூலம் எனின் அன்று - எளிமையான சூலமோ எனின் அன்று; தொல்லை வரும் காலம் என - பழமையாக வருகின்ற காலபாசம் என்று; உன்னு - நினைக்கிற; கருத்தினனாய் - கருத்தினை உடையவனாய்; அது நாம் அற - அதன் பெயர் அழியும்படியாக; ஓர் ஆலம் முக அம்பின் - ஒப்பற்ற நஞ்சு தோய்ந்த முனையினை உடைய அம்பினால்; அறுத்தனனால் - அறுத்தான். |
(77) |
8379. | உளம்தான் நினையாதமுன், உற்று, உதவாக் கிளர்ந்தானை, இரண்டு கிழித் துணையாய்ப் பிளந்தான்-உலகு ஏழினொடு ஏழு பெயர்ந்து அளந்தான், ‘வலி நன்று’ என,-அங்கதனே. |
அங்கதனே - (அது கண்ட) அங்கதன்; ஏழினொடு ஏழு உலகு - பதினான்கு உலகங்களையும்; பெயர்ந்து அளந்தான் - (மூவடி) பெயர்த்து வைத்து அளந்தவனாகிய (திருமாலின் அவதார நாயகனாகிய) இராமனின்; வலி நன்று என - வலிமை நன்று என்று சொல்லி; உளம் தான் நினையாத முன் - மனத்தினால் நினைப்பதற்கு முன்னமேயே; உற்று உதவாக் கிளர்ந்தானை - நெருங்கிப் போரிடக்கிளர்ந்து எழுந்தவனாகிய (மாபக்கனை); இரண்டு கிழித் துணையாய்ப் - இரண்டு கிழியின் தன்மையாகுமாறு; பிளந்தான் - கிழித்தான். |
(78) |
நீலன் - மாலி போர் |
8380. | மா மாலியும் நீலனும், வானவர்தம் கோமானொடு தானவர்கோன் இகலே ஆமாறு, மலைந்தனர் என்று இமையோர் பூ மாரி பொழிந்து, புகழ்ந்தனரால். |
மாமாலியும் - பெருமையில் சிறந்த மாலி என்பவனும்; நீலனும் - வானரப் படைத்தலைவனான நீலன் என்பவனும்; |