இடபன் - வச்சிரத்து எயிற்றன் போர் |
8389. | இடபன்,-தனி வெஞ் சமம் உற்று எதிரும் விட வெங் கண் எயிற்றவன், விண் அதிரக் கடவும் கதழ் தேர், கடவு ஆளினொடும் பட,-அங்கு ஒரு குன்று படர்த்தினனால். |
இடபன் - இடபன் என்ற பெயர் கொண்ட வானர வீரன்; தனி வெஞ்சமம் உற்று - ஒப்பற்ற வலிமையான போரைச் செய்ய நெருங்கி; எதிரும் - (தன்னை) எதிர்ப்பவனும்; விட வெங்கண் - நச்சுப் போன்ற கொடிய கண்களையும்; எயிற்றவன் - பற்களையும் உடையவனாகிய வச்சிரத்து எயிற்றவன் உடைய;விண் அதிரக் கடவும் கதழ்தேர் - வானம் அதிரும்படி செலுத்தப்படுகிற விரைவு பொருந்திய தேரும்; கடவு ஆளினோடு - (அதைச்) செலுத்துகிற பாகனும்; பட - அழியும்படி; ஒரு குன்று - ஒரு குன்றினை; படர்த்தினன் - செலுத்தினான். ஆல்- அசை. |
(88) |
வச்சிரத்து எயிற்றவன் செயல் |
8390. | திண் தேர் அழிய, சிலை விட்டு, ஒரு தன் தண்டோடும் இழிந்து, தலத்தினன் ஆய், ‘உண்டோ உயிர்?’ என்ன உருத்து, உருமோடு எண் தோளனும் உட்கிட, எற்றினனால். |
திண்தேர் அழிய - (தன்) வலிமையான தேர் அழிந்ததனால்; சிலை விட்டு - (தன் கையில் இருந்த) வில்லை விட்டு விட்டு; (அந்த வச்சிரத்து எயிற்றவன்) ஒரு தன் தண்டோடும் இழிந்து - ஒப்பற்ற (தன்னுடைய) தண்டாயுதத்தோடு (கீழ்) இறங்கி; உருமோடு - இடியுடன்; எண் தோளனும் - எட்டுத் தோள்களை உடைய சிவபிரானும்; உட்கிட - அச்சப்படும் படியாக; உண்டோ உயிர் என்ன - (கண்டவர் இனி இவனுக்கு) உண்டோ உயிர் என்று எண்ணும் படி; உருத்து - சினந்து; எற்றினன் - அடித்தான். ஆல் - அசை. |
(89) |
அனுமன் செயல் |
8391. | ‘அடியுண்டவன் ஆவி குலைந்து அயரா, இடியுண்ட மலைக் குவடு இற்றதுபோல் |