பக்கம் எண் :

452யுத்த காண்டம் 

8401.குலையப் பொரு சூலன் நெடுங் கொலையும்
உலைவுற்றில, உய்த்தலும் ஓய்வு இலன், ஒண்
தலை அற்று உகவும், தரை உற்றிலனால்-
இலையைப் பரி மேல் கொள் இருக்கையினான்.

 

இலையப்பரி  - தாளத்திற்கு ஏற்ப அடியிட்டு நடக்கும் குதிரையின்;
மேல்   கொள்  இருக்கையினான்   -  மேல்  நிலையாக  இருக்கை
கொண்டவனாகிய  (பிசாசன்);  ஒண்தலை  அற்று  உகவும்  -  தன்
ஒளியுள்ள  தலை  துண்டுபட்டு விழுந்த பின்பு கூட; குலையப் பொரு
சூலன்
 -  (வானர வீரர்கள்) குலைந்து ஓடும்படியாகப் போர் செய்கிற
சூலத்தை  உடையவனாய்;நெடுங் கொலையும் உலைவுற்றில - (தான்)
(செய்து  வந்த)  பெரும்   (போர்க்)  கொலையையும் குறைவில்லாமல்;
உய்த்தலும்   ஓய்வு  இலன்   -   செய்தலிலும்   ஓய்வு   கொண்டு
ஒழியாதவனாகி; தரை உற்றிலனால் - தரையில் விழாமல் இருந்தனன்.
 

தலையை    இழந்த பிசாசனுடைய முண்டம் நிகழ்த்திய போர் பற்றி
இப்பாடல்   கூறுகிறது.  இது  அட்டையாடல்  என்க.  இலயப்பரி  -
தாளத்திற்கேற்ப  அடியிட்டு  நடக்கும்  குதிரை. இலையம் - இலயம்.
தாளத்தின் கால அளவு.
 

                                                (100)