பக்கம் எண் :

 மகரக் கண்ணன் வதைப் படலம் 453

20. மகரக் கண்ணன் வதைப் படலம்
 

மகரக்   கண்ணனை இராமன் வதைத்தலைப் பற்றிக் கூறும் படலம்
என்பது  பொருள். ‘மகராட்சன்’ என்னும் வட சொல் ‘மகரக்கண்ணன்’
என  மொழிமாற்றம் செய்யப் பெற்றுள்ளது. மகரம் போன்ற கண்ணை
உடையவன் இவன். கரனுடைய மகன்.
 

படைத்     தலைவர் அழிந்தமையைத் தூதுவர் வாயிலாக அறிந்து
இராவணன்  வருந்தி  இருக்கக்  கரன்  மகனாகிய  மகரக்  கண்ணன்
தன்னை  ஏவினால்  தன்  தந்தையைக் கொன்றவனாகிய இராமனைக்
கொன்று    பழிதீர்ப்பேன்    எனக்   கூற   இராவணன்   மகிழ்ந்து
விடையளிக்கின்றான்.  மகரக்கண்ணன்  தன்னுடைய  ஐந்து வெள்ளம்
சேனையுடன்  இராவணன்  அனுப்பிய  ஐந்து  வெள்ளம் சேனையும்,
சோணிதக்கண்ணன்,   சிங்கன்   ஆகியோர்  தேர்க்காவலராக  உடன்
வரவும்  போர்க்களம்  புகுகின்றான்.  அங்கு  மாயப்  போர்  செய்து
இராமனம்பால்   மாள்கின்றான்.   சோணிதக்   கண்ணனை  நளனும்
சிங்கனைப்   பனசனும்   பொருது   மாய்த்தனர்  என்ற  செய்திகள்
இப்படலத்தில் கூறப்படுகின்றன.
 

இராவணனின்  வெற்றிக் கூறாக விளங்குபவன் இந்திரசித்து. அவன்
பெறுகின்ற   இருவெற்றிகளுள்  முதலாவது  நாகபாசப்  படலத்திலும்
இரண்டாவது   பிராமத்திரப்   படலத்திலும்   இடம்   பெறுகின்றன.
இரண்டையும்  ஒன்றன்  பின் ஒன்றாகக் கூறுவதைக் காட்டிலும் சற்று
இடையிட்டுக்   கூறுவது  காவிய   ஓட்டத்திற்குச்  சுவையூட்டுவதாக
அமையும்.   எனவே   இரண்டனுக்கும்  இடையில்  படைத்தலைவர்
வதைப்படலமும்,     மகரக்கண்ணன்     வதைப்படலமும்    இடம்
பெறுகின்றன.
 

ஏனைய     காண்டங்களைவிட   யுத்தகாண்டத்தில்   கவிஞன்
கையாளவேண்டிய  பாத்திரங்கள் மிகுதியாக அமைகின்றன. அவற்றை
அவற்றின்    தகுதிகளுக்கேற்பச்    செயற்படுத்த   வேண்டியுள்ளது.
எடுத்துக்காட்டாக   அதிகாயன்  வதைப்படலம்  முதல்  இத்திரசித்து
வதைப்படலம்    ஈறாகப்   பலபடலங்களில்   இலக்குவன்   மற்றும்
வானரப்படைத் தலைவருடைய செயல்திறங்களே பெரும்பாலும் பேசப்
பெறுகின்றன.   இடையில்   இம்மகரக்கண்ணன்  வதையை  இராமன்
நிகழ்த்துவது பொருத்தமுடைய அமைப்பாக இருத்தலைக் காணலாம்.