தூதுவர் நகருக்கு ஏகி இராவணனுக்கு அறிவித்தல் |
8402. | ‘இன்று ஊதியம் உண்டு’ என இன்னகைபால் சென்று ஊதின தும்பிகள்; தென் திசையான் வன் தூதரும் ஏகினர், வஞ்சனையான- தன் தூதரும் ஏகினர், தம் நகர்வாய். |
இன்னகைபால் - இனிய சிரிப்பினை உடையவளான சீதையினிடத்து; இன்று ஊதியம் உண்டு என - இன்று கிடைப்பதொரு நற் பேறு உண்டு என (நன்னிமித்தமாக) சென்று ஊதின தும்பிகள் - வண்டுகள் சென்று இசைத்தனவாயின; தென்திசையான் வன்தூதரும் - தென்திசைக் காவலனான யமனின் வலிய தூதர்களும்; ஏகினர் - (போரில் இறந்தவர்களின் உயி்ர்களைக் கொண்டு) தம் நகருக்குச் சென்றனர்; வஞ்சனையான் தன் தூதரும் - வஞ்சகனான இராவணனின் தூதர்களும்; தம்நகர்வாய் ஏகினர் - தமது நகரமாகிய இலங்கையினிடத்துச் சென்றனர். (படைத்தலைவர் அழிந்த செய்தியினைக் கொண்டு சென்றனர்). |
படைத்தலைவர் அழிந்தமையை நற்செய்தியாகச் சீதைபால் வண்டுகள் எடுத்துச் செல்ல, துயரச் செய்தியாக இராவணனிடம் அவன் தூதர்கள் எடுத்துச்சென்றனர், வெற்றி தோல்விகளால் பாதிக்கப்படாத காலனின் தூதர்கள் தம் கடமையாக இறந்தோரின் உயிர்களைப் பற்றிச் சென்றனர் என்பதாம். கண்ணோட்டமின்றி உயிர் கொண்டு செல்லும் தன்மையுடைமை பற்றி வன்தூதர் என்றது அடைமொழிக் குறிப்பு. முதல் நாட் போரிலேயே தனக்கு "நாசம் வந்துற்றதனை" (பாடல் 7302) நன்குணர்ந்த பின்னும் அதனை வெளிப்படுத்தாமல் தன் உறவினரையும் சுற்றத்தாரையும் ஒருவர் பின் ஒருவராகக் களப்பலியாகப் போர்க்களத்திற்கு அனுப்பிக்கொண்டிருந்ததால் இங்கு இராவணனை "வஞ்சனையான்"- என்றார். |
(1) |
8403. | ஏகி, தனி மன்னன் இருந்துழி புக்கு, ‘ஓகைப் பொருள் இன்று’, என, உள் அழியா, வேகத்து அடல் வீரர் விளிந்த எலாம் சோகத்தொடு, இறைஞ்சினர், சொல்லினரால். |
ஏகி - (தூதர்கள், தம்நகருக்குச்) சென்று; தனி மன்னன் இருந்துழிப்புக்கு இறைஞ்சினர் - ஒப்பற்ற மன்னவனாகிய இராவணன் இருந்த இடத்திற்குச்சென்று (அவனை) வணங்கி; |