‘ஓகைப் பொருள் இன்று’ என - மகிழ்ச்சிக்குரிய செய்தி சொல்வதற்கில்லையே என்று; உள் அழியா - மனம் வருந்தினவராய் (அத்தூதர்); வேகத்து அடல்வீரர் - போர்ச் செயலில் வல்லமையும் அஞ்சாமையும் உடைய படைத்தலைவரும் அவர்தம் படைஞரும்; விளிந்த எலாம் - இறந்த செய்தியை எல்லாம்; சோகத்தொடு சொல்லினர் - வருத்தத்துடன் கூறினார்கள். |
இராவணன் தன் குடிகளைப் பொறுத்தவரை சிறந்த மன்னனாகையால் ஒப்பற்ற மன்னன் என்றார். |
(2) |
8404. | சொன்னார்; அவர் சொல் செவியில் தொடர்வோன், இன்னாத மனத்தின் இலங்கையர்கோன், வெந் நாக உயிர்ப்பினன், விம்மினனால்; அன்னான் நிலை கண்டு, அயல் நின்று அறைவான்: |
சொன்னார் - தூதர்கள் படைத்தலைவர் வதையுண்டமையைக் கூறினார்கள்; அவர் சொல் செவியில் தொடர்வோன் - அவ்வுரையினைச் செவியினிடத்துக் கேட்டவனாகிய; இன்னாத இலங்கையர்கோன் - துன்புற்ற மனத்தினையுடைய இலங்கையர்களுக்குத் தலைவனாகிய இராவணன்; வெந்நாக உயிர்ப்பினன் - கொடிய நாகம் போற் (சீற்றத்துடனாகிய) பெருமூச்சை விடுபவனாய்; விம்மினன் - பொருமினான்; அன்னான் நிலை கண்டு - (அப்படிப்பட்ட) அவனுடைய நிலையைக்கண்டு; அயல் நின்று அறைவான் - (மகரக்கண்ணன்) அவ்விராவணன் அருகில் நின்று கூறுவானாயினன். |
(3) |
மகரக்கண்ணன் போர்க்குத் தன்னை அனுப்ப வேண்டுதல் |
8405. | ‘முந்தே, என தாதையை மொய் அமர்வாய், அந்தோ! உயிர் உண்டவன் ஆர் உயிர்மேல் உந்தாய்; எனை யாதும் உணர்ந்திலையோ? எந்தாய்! ஒரு நீ இடர் கூருதியோ? |
எந்தாய் - எந்தையே! மொய் அமர்வாய் - நெருங்கிய போரில்; என தாதையை - என்னுடைய தந்தையை; ஆர் உயிர் உண்டவன் உயிர்மேல் - ஆருயிர் கொண்டவனாகிய இராமனின் உயிர்கொள; முந்தே - (இதுவரை போரில் அழிந்தவர்களுக்கு) முன்னமே; |