வண்டுகள் குடைந்து உண்ணும்படியான மிக்க அழகிய மாலையை உடைய மகரக்கண்ணன்; "என்னுடைத் தாதை தன்னை இன்னுயிர் உண்டாய்" - (இராமனை நோக்கி) "என்னுடைய தந்தையினது இனிய உயிரை நீ போக்கினாய்" என்னும் முன் உடைத்தாய தீய முழுப்பகை - "என்று (எனக்கு) முன்னமே உண்டாகிய கொடிய பெரும் பகையானது; மூவர்க்கு இன்றி, நின்னுடைத்து ஆயது அன்றே - மும்மூர்த்திகளிடம் இல்லாமல் உன்னிடத்து உள்ளது அல்லவா? இன்று அது நிமிர்வென் என்றான் - இன்று அந்தப் பகையை நீக்கித் தலையெடுப்பேன்" என்று சொன்னான். |
(17) |
8419. | தீயவன் பகர்ந்த மாற்றம் சேவகன் தெரியக் கேட்டான்,- ‘நீ கரன் புதல்வன்கொல்லோ? நெடும் பகை நிமிர வந்தாய்; ஆயது கடனே அன்றோ, ஆண் பிறந்து அமைந்தார்க்கு? ஐய! ஏயது சொன்னாய்’ என்றான்,-இசையினுக்கு இசைந்த தோளான். |
இசையினுக்கு இசைந்த தோளன், சேவகன் - புகழுக்குப் பொருந்திய தோள் வலி உள்ளவனும் வீரனுமாகிய இராமன்; தீயவன் பகர்ந்த மாற்றம் தெரியக் கேட்டான் - கொடியவனாகிய மகரக்கண்ணன் சொன்ன சொற்களை விளங்கக் கேட்டு; "நீ கரன் புதல்வன் கொல்லோ - நீ கரனுடைய மகனா? "நெடும் பகை நிமிர வந்தாய் - (நின்னுடைய) பழைய பகையைத் தீர்த்துக் கொள்ள வந்திருக்கின்றாய்; "ஆண் பிறந்து அமைந்தார்க்கு ஆயது கடனே அன்றோ - (ஒரு குடியில் ஆண்மகனாகப் பிறந்து வளர்ந்தவர்க்குத் தந்தை மேல வந்த பழியைத் தீர்ப்பது கடமையல்லவா; "ஐய! ஏயது சொன்னாய்" என்றான் - ஐயனே! நீ தகுதியானதையே சொன்னாய்" என்று கூறினான். |
(18) |
மகரக்கண்ணன் - இராமன் போர் |
8420. | உரும் இடித்தென்ன வில் நாண் ஒலி படுத்து, ‘உன்னோ எந்தை செரு முடித்து, என்கண் நின்ற சினம் முடித்து அமைவென்’ என்னா, |