21. பிரமாத்திரப் படலம் |
இந்திரசித்து, இலக்குவன் மற்றும் வானரப்படைகளின் மீது பிரமன் அருளிய அத்திரத்தை ஏவிய செய்தியை விரித்துரைக்கம் பகுதியாதலின் இது பிரமாத்திரப்படலம் எனப்பட்டது. |
மகரக்கண்ணன் முதலானோர் போர்க்களத்தில் இறந்தமையைத் தூதர்கள் இராவணனிடம் தெரிவித்தன். அதுகேட்ட இராவணன் தன் மகன் இந்திரசித்தனை அழைத்து வருமாறு ஆணையிட, வந்த மகன் தந்தையைத் தேற்றிப் போர்க்களம் போகின்றான். |
பெரும்படையுடன் சென்ற இந்திரசித்தனின் படைஞரெல்லாம் அழியுமாறு இராமனும் இலக்குவனும் போரிட்டதைக் கண்டு வியந்து நிற்கின்றான். பிறகு இந்திரசித்தனுக்கும் இலக்குவனுக்கும் கடும்போர் நிகழ்ந்தது. அயன் படையை இந்திரசித்தன் மேல் ஏவ முற்பட்ட இலக்குவனை இராமன் தடுக்கின்றான். அவ்வளவில் தான் அயன் படையைத் தொடுக்க எண்ணியவனாய் இந்திரசித்தன் மறைகின்றான். அவன் கருத்துணராத இராம, இலக்குவர் போர்க்கோலம் களைகின்றனர். |
மறைந்து சென்ற இந்திரசித்தன் தன் திட்டத்தை இராவணனிடம் கூற அவனும் மகிழ்வெய்தி மாயப்போர் புரியுமாறு மகோதரனை ஏவுகின்றான். அவனும் போர்க்களம் சென்று மாயப்போர் புரிய வானரத் தலைவர்கள் ஒருவர் ஒருவரைக் காணாமல் திகைக்கின்றனர். இம்மாயை தெளிய இலக்குவன் சிவன் படையைச் செலுத்த, மாயை அகல்கின்றது. இதனைத்தூதர் இராவணனுக்கம் இந்திரசித்தனுக்கும் தெரிவிக்கின்றனர். இது தருணம் எனக் கருதிய இந்திரசித்து அயன்படை ஏவுதற்குரிய வேள்வி இயற்றிப் பின் வானில் மறைந்திருக்கின்றான். |
இவ்வளவில் மகோதரன் இந்திரனுடைய வடிவெடுத்து இராமனுடைய படைகளைத் தாக்குகின்றான். அதனால் அனுமன் முதலானோர் திகைக்கின்றனர். வானில் மறைந்திருந்த இந்திரசித்தன் அயன் படையை இலக்குவன் மேல் ஏவுகின்றான். தெய்வப் படைகளுக்கு வழிபாடு இயற்றப் போர்க்களம் நீங்கிச் சென்ற இராமன், மற்றும் சேனைகளுக்கு உணவு கொண்டு வரச் சென்ற வீடணன் ஆகியோரை விடுத்து ஏனையோரை அவ்வயன் படை சாய்க்கின்றது. |
போர்க்களம் புகுந்த இராமன் தம்பியின் நிலை கண்டு பெருந்துயர் கொள்ளுகின்றான். அவன் நிலை கண்டு மனம் பொறாத தேவர்கள் அவனுக்கு உண்மையை உணர்த்துகின்றனர். இவ்வளவில் இராவணனிடம் சென்ற அவனுடைய தூதர் அவனது பகை முடிந்ததாக அறிவிக்கின்றனர். |