இராவணன் இந்திரசித்தை அழைத்தல் | 8441. | கரன் மகன் பட்டவாறும், குருதியின் கண்ணன் காலின் சிரன் நெரிந்து உக்கவாறும், சிங்கனது ஈறும், சேனைப் பரம் இனி உலகுக்கு ஆகாது என்பதும், பகரக் கேட்டான்; வரன்முறை துறந்தான், ‘வல்லைத் தருதிர், என் மகனை!’ என்றான். | கரன்மகன் பட்டவாறும் - கரனுடைய மகனான மகரக் கண்ணன் இறந்த வகையினையும்; குருதியின் கண்ணன் காலின் சிரன் நெரிந்து உக்கவாறும் - இரத்தாட்சன் என்னும் அரக்கன் (நளனது) காலினால் சிரம் நெரிந்து உயிர்விட்ட வகையினையும்; சிங்கனது ஈறும் - (பனசனால் ஏற்பட்ட) சிங்கனது முடிவினையும்; சேனைப் பரம்இனி உலகுக்கு ஆகாது என்பதும் - (தனது) சேனைப் பாரம் இனி உலகில் இல்லாமல் ஒழிந்ததென்பதையும்; பகரக் கேட்டான் - (தூதர்கள் அறிந்து) சொல்லக் கேட்டவனாய்; வரன் முறை துறந்தான் - நீதிநெறியினை நீங்கியவனாகிய இரவணன்; ‘வல்லைத் தருதிர் என் மகனை’ என்றான் - ‘என் மகனை (இந்திரசித்தை) விரைவில் அழைத்து வருவீராக’ என (அத்தூதரிடம்) கூறினான். | தனக்கு மேன்மேலும் ஏற்படுகின்ற தோல்விகளைக் கண்டும் மனம் மாறுபடாமல் - தன் தவற்றை உணராமல் அகங்காரம் கொண்டு செயல்படுகின்றானாகையால் இராவணனை ‘வரன்முறை துறந்தான்’ என்றார். | (1) | 8442. | ‘கூயினன், நுந்தை’ என்றார்; குன்று எனக் குவிந்த தோளான், ‘போயின நிருதர் யாரும் பொன்றினர் போலும்!’ என்றான்; ‘ஏயின பின்னை, மீள்வார் நீ அலாது யாவர்?’ என்னா, மேயது சொன்னார், தூதர்; தாதைபால் விரைவின் வந்தான். |
|
|
|