பக்கம் எண் :

480யுத்த காண்டம் 

‘கூயினன்,     நுந்தை’  என்றார்  -  (இராவணன்  பணித்தவாறு
இந்திரசித்தை   அணுகிய  தூதர்கள்)   ‘உமது   தந்தையார்  (உம்மை)
அழைத்தனர் எனத்   தெரிவித்தனர்; குன்று எனக் குவிந்த தோளான்
- குன்று   போலத்  திரண்ட  தோளை  உடையவனான  இந்திரசித்து;
‘போயின  நிருதர் யாரும்   பொன்றினர்  போலும்!’  என்றான் -
‘(போருக்குச்)  சென்ற  அரக்கர்கள்  யாவரும்  இறந்து  பட்டனரோ?’
எனக் கேட்டான்; ‘ஏயின  பின்னை, மீள்வார்  நீ அலாது யாவர்?’
என்னா
 -  ‘(இராவணனால்  இம்மனிதர் மீது) போருக்கு என ஏவின
பின்பு  (பொருத  பின்  அப்போர்க்களத்தினின்றும்)  மீண்டு திரும்பி
வருபவர்  உன்னையல்லால்  வேறு யார் இருக்கிறார்கள்?’ எனக் கூறி;
மேயது  சொன்னார்  தூதர் -  (போர்க்  களத்தில்)  நிகழ்ந்ததனைத்
தூதர்கள்  எடுத்துரைத்தனர்; தாதை  பால்  விரைவின்  வந்தான் -
(அதனைக்  கேட்ட  இந்திரசித்தன்)  தந்தையினிடத்தினில்  விரைந்து
வந்தான்.
 

                                                   (2)
 

           தந்தையைத் தேற்றி, இந்திரசித்தன் போர்க்களம் செல்லுதல்
 

8443.

வணங்கி, ‘நீ, ஐய! “நொய்தின் மாண்டனர் மக்கள்” என்ன
உணங்கலை; இன்று காண்டி, உலப்பு அறு குரங்கை நீக்கி,
பிணங்களின் குப்பை; மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை
கணங் குழைச் சீதைதானும், அமரரும் காண்பர்’ என்றான்.
 

வணங்கி ‘நீ ஐய!’ “நொய்தின்  மாண்டனர்  மக்கள்”  என்ன
உணங்கலை
 -  (இந்திரசித்து,  தன் தந்தையை) வணங்கி, ‘ஐயனே நீ
(வன்மையான)  புதல்வர்கள்  (பகைவரால்)  இறந்தொழிந்தார்கள்’ என
வாடி  வருந்துதல்  தவிர்க;  இன்று காண்டி - (எனது போர்த்திறனை)
இன்றே காண்பாய்; உலப்பறு குரங்கை நீக்கி, பிணங்களின் குப்பை
- அளவற்ற  குரங்குச்சேனைகளை  (உயிர்)  நீக்குவதனால் (அவற்றின்)
பிணக்குவியலையும்;  மற்றை நரர் உயிர் பிரிந்த  யாக்கை - ஏனை
மனிதராகிய  இராம  இலக்குவரின்  உயிர்  நீங்கிய  உடம்புகளையும்;
‘கணங்குழைச் சீதைதானும் அமரரும் காண்பர்’ என்றான் - காதணி
அணிபவளான     சீதையும்,   தேவர்களும்   காண்பார்கள்”   என்று
கூறினான்.