மால் கடல் சேனை காணும் வானவர் மகளிர், மானப் பாற்கடல் அனைய, வாட் கண் பனிக் கடல் படைத்தது அன்றே.
நாற்கடல் அனைய தானை நடந்திட - நாற் (றிசைக்) கடல்களை ஒத்த (நால்வகைச்) சேனைகள் இவ்வாறு நடந்து செல்லுவதால்; கிடந்த பாரின் மேல் கடந்து எழுந்த தூளி - பரந்து கிடந்த பூமியிலிருந்து மேலே புறப்பட்டு எழுந்த துகள்கள்; விசும்பின்மேல் கொழுந்து வீச - ஆகாயத்தின் மேற்பரப்பில் முற்பட்டு வீசினமையால்; மால்கடல் சேனை காணும் வானவர் மகளிர் - பெருங்கடல் போலும் இந்திரசித்தின் சேனைகளைக் காண வந்த தேவ மகளிரின்; மானப் பாற்கடல் அனைய வாட்கண் - பெருமை வாய்ந்த பாற்கடலை ஒத்த ஒளிபொருந்திய அகன்ற கண்கள்; பனிக்கடல் படைத்த - குளிர்ந்த கடலை (மிக்க கண்ணீரை)த் தோற்றுவித்தன.
(10)
8451.
ஆயிர கோடித் திண் தேர், அமரர்கோன் நகரம் என்ன மேயின சுற்ற, தான் ஓர் கொற்றப் பொன் தேரின் மேலான், தூய அச் சுடர்கள் எல்லாம் சுற்றுற, நடுவண் தோன்றும் நாயகப் பரிதி போன்றான்-தேவரை நடுக்கம் கண்டான்.
தேவரை நடுக்கம் கண்டான் - தேவர்களை நடுக்கமுறச் செய்த திறலோனாகிய இந்திரசித்து; அமரர்கோன் நகரம் என்ன - தேவேந்திரனது (அமராவதி) நகரத்தையொத்த அழகும் பெருமையுமுடைய; ஆயிர கோடி திண்தேர் மேயின சுற்ற - திண்ணிய ஆயிரங்கோடித் தேர்கள் (தன்னைச்) சூழ்ந்துவர; தான் ஓர் கொற்றப் பொன் தேரின் மேலான் - தான் ஒப்பற்றதொரு வெற்றி மிக்க பொன்மயமான தேரின் மேல் அமர்ந்தவனாகி; தூய அச்சுடர்களெல்லாம் சுற்றுற - தூய்மையான ஒளிக்கற்றைகளை உடைய கோள்களும் பிறவும் தன்னைச் சுற்றி அமைய; நடுவண் தோன்றும் நாயகப் பரிதி போன்றான் - (அவற்றின்) நடுவே திகழும் தலைமை வாய்ந்த சூரியனை ஒப்பத் தோன்றினான்.