நீலனை முதலாய் உள்ள நெடும்படைத்தலைவர் நின்றார் - நீலனை முதலாகக் கொண்டு நெடிய பெருஞ்சேனைகட்குத் தலைவராக அங்கு நின்ற வானரவீரர்கள்; தாலமும் மலையும் ஏந்தி தாக்குவான் சமையும் காலை - பனை மரங்களையும், மலைகளையும் பறித்தெடுத்துக்கொண்டு (அரக்கர்களை) தாக்குதற்கு முற்பட்ட பொழுது; ஞாலமும் விசும்பும் காத்த நானிலக் கிழவன் மைந்தன் - மண்ணுலகையும் விண்ணுலகையும் காத்த நானில மன்னனாகிய தசரதன் மைந்தனாகிய இராமன்; மேல் அமர்விளைவை உன்னி, விலக்கினன், விளம்பலுற்றான் - இனிமேல் நிகழவிருக்கும் போரின் விளைவை எண்ணி, (அவ்வானர வீரர்களைத்) தடுத்து நிறுத்தியவனாய்ப் பின்வருமாறு கூறத் தொடங்கினான். | (20) | 8461. | ‘கடவுளர் படைகள் நும்மேல் வெய்யவன் துரந்தகாலை, தடை உளஅல்ல; தாங்கும் தன்மையிர் அல்லீர்; தாக்கிற்கு இடை உளது எம்பால் நல்கி, பின் நிரை நிற்றிர்; ஈண்டு இப் படைஉளதனையும், இன்று, எம் வில் தொழில் பார்த்திர்’ என்றான். | “கடவுளர் படைகள் நும்மேல்” வெய்யவன் துரந்தகாலை - “தெய்வப் படைக்கலங்களை உங்கள்மீது கொடியோனாகிய இந்திரசித்து செலுத்தும்போது; தடை உள அல்ல - (அவை, மரம், மலை முதலியவற்றால்) தடுத்தற்குரிய அல்ல; தாங்கும் தன்மையீர் அல்லீர் - (நீங்களும் அவற்றை ஏற்றுத்) தாங்கக்கூடிய வல்லமை யுடையீரல்லீர்; தாக்கிற்கு இடை உளது எம்பால் நல்கிப்பின் நிரை நிற்றிர் - (முன்னின்று) தாக்குதற்கு இடமாய் உள்ள முதலிடத்தினை எங்களுக்குக் கொடுத்துவிட்டு (எங்களுக்குப் பின்னே) பின் வரிசையில் நிற்பீராக; ஈண்டு இப்படை உளதனையும் இன்று, எம் வில்தொழில் பார்த்திர்” என்றான் - இங்கு இந்த அரக்கர் சேனை (உயிரோடு) உள்ள அளவும் இன்று எம்முடைய வில் தொழில் வல்லமையினை (உடன் நின்று) காண்பீராக” என்று கூறினான். | (21) |
|
|
|