8469. | ஆயிரம் தேரை, ஆடல் ஆனையை, அலங்கல் மாவை, ஆயிரம் தலையை, ஆழிப் படைகளை, அறுத்தும், அப்பால் போயின பகழி வேகத் தன்மையைப் புரிந்து நோக்கும்; பாயும் வெம் பகழிக்கு ஒன்றும் கணக்கு இலாப் பரப்பைப் பார்க்கும்; |
ஆயிரம் தேரை, ஆடல் ஆனையை - ஆயிரக்கணக்கான தேர்களையும், வெற்றியை உடைய யானைகளையும்; அலங்கல் மாவை - மாலையணிந்த குதிரைகளையும்; ஆயிரம் தலையை ஆழிப் படைகளை - ஆயிரக்கணக்கான (வீரர்) தலைகளையும், சக்கரப் படைகளையும்; அறுத்தும் அப்பால் போயின - அறுத்தும் அப்பாற் சென்ற; பகழி வேகத் தன்மையைப் புரிந்து நோக்கும் - அம்புகளின் விரைவுத் தன்மையினைப் புரிந்து நோக்குவான்; பாயும் வெம்பகழிக்கு - பாய்ந்து (ஊடுருவிச்) செல்வனவாகிய அம்புகளுக்கு; ஒன்றும் கணக்கிலாப் பரப்பைப் பார்க்கும் - சிறிதும் கணக்கிட்டுக் கூறுவதற்கில்லாத போர்க்களத்தின் பரப்பினை உற்றுப் பார்ப்பான். |