| திக்கிடை நின்ற யானை சிரம் பொதிர் எறிய, சிந்தி உக்கன விசும்பின் மீன்கள் உதிர்ந்திட, தேவர் உட்க, |
அக்கணத்து - அந்தக் கணத்திலேயே; ஆயிர கோடித் தேரும் - (மேற்கண்டவாறு இந்திரசித்தன் சினந்து கூறிய அளவில் அரக்க வீரர்களுடைய) ஆயிரங்கோடித் தேர்களும்; திக்கிடை நின்ற யானை சிரம் பொதிர் எறிய - எண் திசைகளிற் காவலாக நின்ற யானைகள் தலை நடுக்கமுற்று அதிரவும்; விசும்பின் மின்கள் சிந்தி உக்கன உதிர்ந்திட - வானத்திலே உள்ள விண் மீன்கள் சிதறிப் பொடியாய் உதிரவும்; தேவர் உட்க - தேவர்கள் நெஞ்சங்குலைந்து நடுங்கவும்; நேமிப்பாட்டில் புவனம் கிழிந்தன என்ன - சக்கரங்கள் ஆழப்பதிதலால் நிலவுலகம் பிளவுற்றது என்னும்படி; ஆர்த்து மண்டிப் புக்கன - ஆரவாரித்து நெருங்கிப் (போர்க்களத்தில்) புகுந்தன. |
(38) |
இலக்குவன் வஞ்சினம் |
கலி விருத்தம் |
| 8479. | மாற்றம் ஒன்று. இளையவன் வளை வில் செங்கரத்து ஏற்றினை வணங்கி நின்று, இயம்புவான்; ‘“இகல்- ஆற்றலன் அரவு கொண்டு அசைப்ப, ஆர் அமர் தோற்றனென்” என்று கொண்டு உலகம் சொல்லுமால்; |
இளையவன் - இளையோனாகிய இலக்குவன்; வளைவில் செங்கரத்து ஏற்றினை வணங்கி நின்று - வளைந்த வில்லினைப் பிடித்த சிவந்த கையினை உடைய ஆண்சிங்கம் போல்வானாகிய இராமனை வணங்கி நின்று; மாற்றம் ஒன்று இயம்புவான் - (பின்வருமாறு) ஒரு வார்த்தையைக் கூறுவானாயினான்; “இகல் ஆற்றலன் அரவு கொண்டு அசைப்ப - ‘போரில் எதிர் நிற்கும் ஆற்றலவனாகிய இந்திரசித்து நாகபாசத்தைக் கொண்டு இறுகப் பிணித்தமையால்; ஆர் அமர் தோற்றனென் என்று கொண்டு - அரிய போரில் யான் தோல்வியுற்றதாகக் கொண்டு; உலகம் சொல்லும் - (என்னைக் குறித்து) உலகம் பழி கூறும். |
(39) |