பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 505

சூளுரையின்     உச்சமாக இராமனுக்குத்தான் செய்யும் அடிமைத்
தொழிலினால்  தனக்குக்  கிடைக்கவிருக்கும் பெரும்பேற்றினைக் கூட
இழந்து  விடத் தயாராகின்றான் இலக்குவன். சூளுரை கூறுவார் தமக்கு
இன்றியமையாத  விருப்பமான பொருளில் வைத்துச் சூளுரை கூறுவர்
என்பதனை நோக்க இராம சேவையில் இலக்குவனுக்கு உள்ள ஈடுபாடு
பெரிதும் விளங்கும்.
 

                                                  (43)
 

                                            இராமன் பாராட்டு
 

8484.

வல்லவன் அவ் உரை வழங்கும் ஏல்வையுள்,
‘அல்லல் நீங்கினம்’ என, அமரர் ஆர்த்தனர்;

எல்லை இல் உலகங்கள் யாவும் ஆர்த்தன;
நல் அறம் ஆர்த்தது; நமனும் ஆர்த்தனன்.
 

வல்லவன் அவ்  உரை  வழங்கும்  ஏல்வையுள்  -  (சொல்லிய
வண்ணம்  செய்ய)   வல்லவனாகிய   இலக்குவன் அத்தகைய வஞ்சின
மொழியைக்  கூறிய அளவில்;  அமரர்  ‘அல்லர்  நீங்கினம்’  என
ஆர்த்தனர்
- வானவர்கள் ‘இனி நாம் துன்பம் நீங்கப் பெற்றேம்’ என
ஆரவாரித்தனர்;   எல்லையில்  உலகங்கள் யாவும்  ஆர்த்தன  -
எல்லையில்லாத  உலகங்களிலுள்ள எல்லா உயிர்களும் (மகிழ்ச்சியால்)
ஆரவாரித்தன;   நல்   அறம்  ஆர்த்தது  -  நன்மையை  உடைய
அறக்கடவுளும்  ஆரவாரித்தது;  நமனும் ஆர்த்தனன் - கூற்றுவனும்
ஆரவாரித்தான்.
 

சொல்லிய   வண்ணஞ்செய்யும் ஆற்றலுடையவனாகலின் இலக்குவன்
வல்லவன்     எனப்பட்டான்.   தீமையின்  ஆற்றலின்முன்  நன்மைச்
சார்பாளராகிய    வானவர்   அடிமைப்பட்டுக்   கிடத்தலின்,   ‘இனி
அவ்வடிமைத்    தன்மை    நீங்கப்பெறுவேம்’    எனக்   கொண்டு
ஆரவாரித்தனர்.  உலக  உயிர்களெல்லாம்  ‘இரக்கமில் சிந்தையராகிய’
அரக்கரின்    ஆளுகையால்    அல்லலுற்று   நின்றமையின்   இனி
அவ்வல்லல்  இல்லையாமென  ஆரவாரித்தன.  அறக்கடவுளின் நியதி
உலகில்   செல்லாவண்ணம்   அரக்கர்   தடையாயிருந்தனர்.   ‘இனி
அத்தடை   நீங்கிற்றென’   அவன்   ஆர்த்தனன்.  நெருங்குதற்கரிய
அரக்கர்   உயிரை   இனி   எளிதிற்  கொள்ளலாமென  கூற்றுவனும்
ஆர்த்தனன். என்பதாம்.
 

                                                  (44)
 

8485.

முறுவல் வாள் முகத்தினன், முளரிக்கண்ணனும்.
‘அறிவ! நீ, “அடுவல்” என்று அமைதி ஆம்எனின்,
இறுதியும் காவலும் இயற்றும் ஈசரும்
வெறுவியர்; வேறு இனி விளைவது யாது?’ என்றான்.