பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 509

இச்செய்யுள்   சொற்பொருட் பின்வருநிலையணி அமையப் பெற்றது.
அடியென்று  தொடங்கி  இறுதி   அடியில்  முடியென்று வந்த நயமும்
காண்க.
 

                                                  (51)
 

8492.

‘இன்னது ஓர் உறுப்பு; இவை இனைய தேர் பரி;
மன்னவர் இவர்; இவர் படைஞர், மற்றுளோர்’
என்ன ஓர் தன்னையும் தெரிந்தது இல்லையால்-
சின்னபின்னங்களாய் மயங்கிச் சிந்தலால்.
 

சின்ன பின்னங்களாய்  மயங்கிச்  சிந்தலால்  -  (போரரங்கில்
அனைவரும்)   கண்டதுண்டமாகச்  சிதறிக்  கலந்து    கிடந்தமையால்;
இன்னது  ஓர்  உறுப்பு -  காணப்படும்  இது இன்ன உறுப்பு; இவை
இனைய   தேர்   பரி
 -   இவை  இத்தன்மையவாகிய  தேர்களும்
குதிரைகளும்;  மன்னவர் இவர்  -  இவர் அரசர்; இவர் படைஞர் -
இவர்கள்   படை   வீரர்கள்;   மற்றுளோர்   என்ன   -  இவர்கள்
அவ்வரசரும்.  படைஞருமல்லாத   தேர்ப்பாகர்  முதலானோர்  என்று
பகுத்துரைத்தற்கேற்ற; ஓர் தன்மையும்  தெரிந்தது  இல்லை  - ஒரு
தன்மையும் தெரிந்தது இல்லையாம்.
 

                                                  (52)
 

8493.

தந்தையர் தேரிடைத் தனயர் வன் தலை
வந்தன; தாதையர் வயிர வான் சிரம்
சிந்தின, காதலர்க்கு இயைந்த தேரிடை-
அந்தரத்து அம்பொடும் அற்று எழுந்தன.
 

அந்தரத்து   அம்பொடும்  அற்று  எழுந்தன  -  (அம்பினால்)
துணிக்கப்பட்டு   அம்பொடும்    விசும்பின்   மேல்  எழுந்தனவாகிய
தலைகளில்;   தனயர்  வன்தலை தந்தையர்  தேரிடை வந்தன  -
புதல்வர்களின்  வலிய  தலைகள் (அவருடைய) தந்தையர்   தேர்களில்
வந்து  வீழ்ந்தன;  தாதையர்  வயிர  வான்சிரம் -  தந்தையர்களின்
வலிமை வாய்ந்த தலைகள்; காதலர்க்கு இயைந்த தேரிடை சிந்தின -
(அவர்தம்) புதல்வர்கட்கு அமைந்த தேர்களிற் சிதறி வீழ்ந்தன.
 

                                                  (53)
 

8494.

செம் பெருங் குருதியின் திகழ்ந்த, செங் கண் மீன்
கொம்பொடும் பரவையில் திரியும் கொட்பு என-
தும்பை அம் தொடையலர் தடக் கை, தூணி வாங்கு
அம்பொடும் துணிந்தன சிலையொடு அற்றன.