| கோளுற்று, உன்னொடு குறித்து, அமர் செய்து, உயிர் கொள்வான் சூளுற்றேன்; இது சரதம்’ என்று, இலக்குவன் சொன்னான். | ‘வாளின், திண்சிலைத் தொழிலினின் மல்லினின் - ‘வாள் கொண்டும், உறுதியான வில்லினாலும், மற்போர் புரிந்தும்; மற்றை ஆளுற்று எண்ணிய படைக்கலம் எவற்றினும் - ஏனைய ஆளுதல் பொருந்தி எண்ணப்பட்ட போர்க்கருவிகள் எல்லாவற்றாலும்; அமரில் கோளுற்று - போரில் வலிமையை மேற்கொண்டு; உன்னொடு குறித்து அமர் செய்து உயிர் கொள்வான் சூளுற்றேன் - ‘உன் நேர் நின்று, போர் புரிந்து உன் உயிரைக் கொள்ளும் பொருட்டு வஞ்சினம் கூறினன்; இது சரதம் என்று, இலக்குவன் சொன்னான் - இது உறுதி என (இந்திரசித்தனை நோக்கி) இலக்குவன் மறுமொழி கூறினான். | (62) | இந்திரசித்தன் மறுமொழி | 8503. | ‘முன் பிறந்த உன் தம்முனை முறை தவிர்த்து, உனக்குப் பின்பு இறந்தவன் ஆக்குவென்; பின் பிறந்தோயை முன்பு இறந்தவன் ஆக்குவென்; இது முடியேனேல், என், பிறந்ததனால் பயன் இராவணற்கு?’ என்றான். | முன் பிறந்த உன்தம் முனை - (உனக்கு) முன்னே பிறந்த உன் அண்ணனாகிய இராமனை; முறை தவிர்த்து - (கால) முறைமையினின்றும் நீக்கி; உனக்குப் பின்பு இறந்தவன் ஆக்குவென் - உனக்குப் பிறகு இறந்தவனாகச் செய்வேன்; பின் பிறந்தோயை முன்பு இறந்தவன் ஆக்குவென் - பின் பிறந்த தம்பியாகிய உன்னை (அண்ணனுக்கு) முன்னர் இறந்தவனாகச் செய்வேன்; இது முடியேனேல் - இதனை நான் செய்து முடிக்காமற் போனால்; இராவணற்குப் பிறந்ததனால் பயன் என்? என்றான் - இராவணனுக்கு மகனாகப் பிறந்ததனால் உற்ற பயன் யாது? என (இலக்குவனை நோக்கி) கூறினான். | (63) |
|
|
|