கண்டு இரங்க - இரு வில்லாளிகளான நீவீர் இருவருங் கண்டு வருந்துமாறு; மறுவது ஆக்கிய எழுபது வெள்ளமும்மாள - (எமக்குப்) பழியினை உண்டாக்கிய எழுபது வெள்ள (வானரச்) சேனையும் இறந்தொழியுமாறு செய்து; உலகை இக்கணத்தின் ஓர் வில்லால் வெறுவிது ஆக்குவன் - உலகினை இவ்வொரு கணத்திலேயே (எனது) ஒரு வில்லினால் வெறுமை உடையதாகுமாறு அழிப்பேன். | (65) | 8506. | ‘கும்பகன்னன் என்று ஒருவன், நீர் அமரிடைக் கொன்ற தம்பி, அல்லன் நான்; இராவணன் மகன்; ஒரு தமியேன்; எம்பிமாருக்கும், என் சிறு தாதைக்கும், இருவீர் செம் புணீர்கொடு கடன் கழிப்பேன்’ எனத் தீர்ந்தான். | நீர் அமரிடைக் கொன்ற - நீர் போரில் (அங்க அங்கமாகச்) சிதைத்தழித்த; கும்பகன்னன் என்று - கும்ப கன்னன் என்று பெயர் படைத்த ஒருவனோ; தம்பி அல்லன் நான் - அல்லது என் தம்பிமார் போன்றவனோ அல்லேன் நான்; இராவணன் மகன் ஒரு தமியேன் - இராவணன் மகன் (யான்) ஆனால் (அவன் மக்களான அக்ககுமாரன், அதிகாயன் என்பார் போன்று அல்லேன்) (உம்மைக் கொல்லவல்ல) ஒப்பற்றுத் தனித்த ஆற்றலுடையேன்; எம்பிமாருக்கும் என்சிறு தாதைக்கும் - (உம்மால் இறந்த) என் தம்பியர்க்கும் என் சிறிய தந்தையான கும்பகன்னருக்கும்; இருவீர் செம்புணீர் கொடு கடன் கழிப்பேன் எனத் தீர்ந்தான் - உங்கள் இருவருடைய குருதியாகிய புனலைக் கொண்டு (நீர்க்கடன்களை) இறுதிக் கடனைச் செய்வேன் எனக் கூறி முடித்தான். | (66) | இலக்குவன் மாற்றுரை | 8507. | ‘அரக்கர் என்பது ஓர் பெயர் படைத்தீர்க்கு எலாம் அடுத்த, புரக்கும் நன் கடன் செய உளன், வீடணன் போந்தான்; |
|
|
|