| கரக்கும் நுந்தைக்கு நீ செயக் கடவன கடன்கள், இரக்கம் உற்று, உனக்கு அவன் செயும்’ என்றனன், இளையோன். | அரக்கர் என்பது ஓர் பெயர் படைத்தீர்க்கு எலாம் - அரக்கர் என்று கூறப்படுவதோர் பெயருடையீராகிய நும் இனத்தார்க்கெல்லாம்; அடுத்த புரக்கும் நன்கடன் - நிகழ்வதாக உள்ளதும் (உயிர்) ஈடேறுவதற்குரியதுமான சிறந்த ஈமக்கடன்களை; செய வீடணன் போந்தான் உளன் - செய்தற்கு (உன் சிற்றப்பனாகிய) வீடணன் எம்மை அடைந்துள்ளான்; கரக்கும் நுந்தைக்கு நீ செயக்கடவன கடன்கள் - (இறந்து) மறையும் நும் தந்தையாகிய இராவணனுக்கு (மைந்தனாகிய) நீ செய்தற்குரிய (ஈமக்) கடன்களை; இரக்கம் உற்று உனக்கு அவன் செயும் - (நீ இப்போதே இறக்கப்போகின்றாய் ஆதலால்) பெரிதும் துயருற்று உனக்கு அவன் செய்யப்போகின்றான்; என்றனன் இளையோன் - என்று கூறினான் இலக்குவன். | (67) | இந்திரசித்தன் - இலக்குவன் கடும் போர் | | 8508. | ஆன காலையின், அயில் எயிற்று அரக்கன் நெஞ்சு அழன்றான், வானும் வையமும் திசைகளும் யாவையும் மறைய, பால் நல் வேலையைப் பருகுவ சுடர் முகப் பகழி, சோனை மாரியின் இரு மடி மும் மடி சொரிந்தான். | ஆன காலையில் அயில் எயிற்று அரக்கன் நெஞ்சு அழன்றான் - (அவ்வாறு இலக்குவன் கூறிய) அப்பொழுது கூரிய பற்களை உடைய அரக்கனாகிய இந்திரசித்து மனம் கொதிப்புற்றவனாகி; பால் நல் வேலையைப் பருகுவ, சுடர்முகப் பகழி - நல்ல பால் போலும் (வானர சேனைகளாகிய) கடலைப் பருகி வற்றச் செய்யும் ஆற்றலுடையனவாகிய ஒளி பொருந்திய முனையினையுடைய அம்புகளை; வானும் வையமும் திசைகளும் யாவையும் மறைய - வானிடமும், மண்ணிடமும், திசைகளும் மறையும்படி; சோனை மாரியின் இருமடி மும்மடி சொரிந்தான் - விடாத பெரு மழையினும் இரு மடங்கு மும்மடங்கு (மிகுதியாகப்) பொழிந்தான். | (68) |
|
|
|