பக்கம் எண் :

518யுத்த காண்டம் 

8509.

அங்கதன்தன்மேல் ஆயிரம்; அவற்றினுக்கு இரட்டி,
வெங் கண் மாருதி மேனிமேல்; வேறு உள வீரச்
சிங்கம் அன்னவர் ஆக்கைமேல் உலப்பு இல செலுத்தி,
எங்கும் வெங் கணை ஆக்கினன்-இராவணன் சிறுவன்.
 

இராவணன் சிறுவன் அங்கதன் தன்மேல் ஆயிரம் - இராவணன்
மகனான   இந்திரசித்து  அங்கதன்    மீது  ஆயிரம்  அம்புகளையும்;
வெங்கண் மாருதி மேனிமேல்  அவற்றினுக்கு இரட்டி - (சினத்தால்)
வெம்மை   மிக்க  கண்களையுடைய   வாயுவின்   மகனான  அனுமன்
மேனியின்  மேல் அவற்றுக்கு   இருமடங்கு (ஈராயிரம்) அம்புகளையும்;
வேறு   உளவீரச்   சிங்கம்  அன்னவர்  ஆக்கைமேல் உலப்பில
செலுத்தி
  -   அவர்களின்    வேறாக    உள்ள   சிங்க  ஏற்றினை
ஒத்தவர்களாகிய  வீரர்களின்   உடம்பின்மேல்   கணக்கிட   முடியாத
அம்புகளையும்   செலுத்தி;   எங்கும்  வெங்கணை  ஆக்கினன்  -
போர்க்களமெங்கும்   (தன்னடைய)   கொடிய  அம்புகளே நிரம்பும்படி
செய்தான்.
 

                                                  (69)
 

8510.

இளைய மைந்தன்மேல், இராமன்மேல், இராவணி இகலி,
விளையும் வன் தொழில் வானர வீரர்மேல், மெய் உற்று
உளையும் வெஞ் சரம் சொரிந்தனன்; நாழிகை ஒன்று,
வளையும் மண்டலப் பிறை என நின்றது, அவ் வரி வில்.
 

இராவணி - இராவணன் மகனான இந்திரசித்து; இளைய மைந்தன்
மேல் இராமன் மேல்
- இளையோனாகிய இலக்குவன் மீதும் இராமன்
மீதும்; வன்தொழில்  விளையும்  வானர  வீரர்  மேல்  -  வலிய
போர்த்தொழிலை  விளைவிக்கின்ற  வானர  வீரர்கள் மீதும்; இகலி -
மாறுபாடு கொண்டு; மெய்யுற்று உளையும் வெஞ்சரம் சொரிந்தனன்
- அவர்தம் உடம்புகளில் தைத்து வருத்தும் வண்ணம் வெம்மையுடைய
அம்புகளை  (மழை  போல் மிகுதியாகச்) சொரிந்தான்; அவ்வரிவில் -
அவ்விந்திரசித்தனுடைய     கட்டமைந்த    வில்லானது;   வளையும்
மண்டலப் பிறை என
-