பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 519

வளைந்து   தோன்றுகின்ற வான மண்டலத்திலுள்ள  பிறைச்  சந்திரன்
போல; நாழிகை ஒன்று நின்றது - ஒரு நாழிகை அளவு (அம்புகளைத்
தொடர்ந்து எய்யும் தொழிலில் நிலைத்து) நின்றது.
 

வடமொழியில்     தசரதன்  மைந்தன்  தாசரதி  என்றாற்போலத்
தமிழிலும்   இராவணன்   மகன்   இராவணி  என  வருமாறு  புதிய
வழக்கினைப்  புகுத்தினார்.  நாழிகை  - 24 நிமிடங்கள். 2லு நாழிகை
ஒரு  மணி  நேரமாம்.  வளைத்த வில் நிமிரும் முன்னமே வேறொரு
அம்பினை    அதன்   கண்பூட்டி   விடுதலால்   வில்   வளைந்தே
காணப்பொற்றதாம்.  இங்ஙனம்  ஒரு நாழிகை நேரம் வில் வளைந்தே
நின்றது  என்றமையால்  ஒரு  தடவை  வளைக்கப்பட்ட  வில் நீண்ட
நேரம் கணை எய்யப் பயன் பட்ட பாங்கு புலப்பட்டது.
 

                                                  (70)
 

8511.

பச்சிமத்தினும், மருங்கினும், முகத்தினும், பகழி,
உச்சி முற்றிய வெய்யவன் கதிர் என உமிழ,
கச்சம் உற்றவன் கைத் துணைக் கடுமையைக் காணா,
அச்சம் உற்றனர், கண் புதைத்து ஒடுங்கினர், அமரர்.
 

கச்சமுற்றவன்  -  (போர்)  ஆடையை  இறுகக்  கட்டிப்  போர்
செய்பவனாகிய  இந்திரசித்து; உச்சி முற்றிய வெய்யவன் கதிரென -
உச்சிப் பொழுதில் முற்றிய வெம்மை உடையவன் ஆன சூரியனுடைய
கதிர்களைப் போன்று; பச்சிமத்தினும் முகத்தினும் மருங்கினும் பகழி
உமிழ
- (இராம இலக்குவர் முதலானோரின்) மேற்புறத்தும், முகத்திலும்
இரு பக்கங்களினும் அம்புகளைச் செலுத்த; கைக்கணைக் கடுந்தொழில்
காண
 - (அங்ஙனம் செலுத்தப் பெற்ற) (அவனது) கையின் கணிருந்து
புறப்பட்ட   அம்புகளின்   கொடுந்தொழிலைக்   காணுதற்கு;  அமரர்
அச்சம் உற்றனர்  கண்   புதைத்து   ஒடுங்கினர்
  -  தேவர்கள்
அச்சமுற்றவர்களாய்க் கண்களைக் (கைகளாற்) பொத்தி மூடிக்கொண்டு
ஒடுங்கி நடுக்கமுற்றார்கள்.
 

கச்சம்     - ஆடை. கச்சம் உறுதல் - ஆடையை இறுக உடுத்தல்,
பச்சிமம்  -  மேற்றிசை.  இங்கு  மேற்புறம் என்ற பொருளில் வந்தது.
முகம்  -  முன்புறம்.  மருங்கு  -  இரு பக்கம். முற்றுதல் - முதிர்தல்,
பகைவரை  எல்லாப்  பக்கங்களிலும்  கொடுமையும், கடுமையுமுடைய
அம்புகளால் இந்திரசித்து வாட்டினான் என்க.
 

                                                  (71)