(இலக்குவன் இந்திரசித்து என்னும்) இருவரும், ஒருவரை ஒருவர் (வெற்றியினால்) மேம்படுவதை (யாரும்) பார்த்தாரில்லை; விசிகம் விசும்பிடைச் செரிந்தன விறகின் வெந்தன - (அவ்விருவராலும் எய்யப்பட்டனவாய்) வானிடத்தே நெருங்கிய அம்புகள் (தீயிடைப்பட்ட) விறகினையொத்து வெந்து சாம்பராயின. | இறத்தல் - கடத்தல், ஒருவரை ஒருவர் விஞ்சுதல், மேம்படல். பிறகு - பின்புறம், இறவு - ‘வு’ விகுதி பெற்ற தொழிற்பெயர். வெந்தன - வெந்தது என, விசிகம் - அம்பு. இலக்குவன் இந்திரசித்து எனுமிருவர் வஞ்சினங் கூறிப் போர் புரிகையில் தான் இடையிற் புகுந்து அம்பு தொடுத்தல் அறமன்று என எண்ணி இராமன் வாளா நின்றான் என்பதாம். வாலி வதத்தில் பிறிதொரு காரணம் பற்றி இவ்வாறு எண்ணாமல் இராமன் அம்பு எய்தனன் என்பதை நினைவு கூர்க. சூழல் நோக்கிச் செய்யுள் மாற்றம் ஏற்படும் என்பதை உணர முடிகிறது. இலக்குவன் இந்திரசித்தன் இருவரில் யார் மேம்பட்டவர் எனக் கூறுதற்கியலாதவாறு சமமாகப் பொருதனர் என்பதனை, “இருவரும் ஒருவரை ஒருவர் இறவு கண்டிலர்” என்பதனாற் குறித்தார். | (73) | | 8514. | மாடு எரிந்து எழுந்து, இருவர் தம் கணைகளும் வழங்க, காடு எரிந்தன; கன வரை எரிந்தன; கனக வீடு எரிந்தன; வேலைகள் எரிந்தன; மேகம் ஊடு எரிந்தன; ஊழியின் எரிந்தன, உலகம். | இருவர் தம் கணைகளும் - (இலக்குவன், இந்திரசித்து என்ற) இருவருடைய அம்புகளும்; மாடு எரிந்து எழுந்து வாங்க - பக்கங்களில் அனல் வீசி எழுந்து (யாண்டும்) பரவிச் செல்லுதலால்; காடு எரிந்தன, கனவரை எரிந்தன - காடுகள் தீப்பற்றி எரிந்தன. பருமையுடைய மலைகள் எரிந்தன; கனக வீடு எரிந்தன வேலைகள் எரிந்தன - பொன்மயமான (இலங்கையின்) வீடுகள் எரிந்தன. கடல்கள் வெதும்பின; மேகம் ஊடு எரிந்தன ஊழியின் உலகம் எரிந்தன - மேகங்களின் (நீர் சுவறி) உட்புறமும் எரிந்தன. ஊழிக்காலத்தை ஒத்து உலகங்களும் எரிந்தன. | (74) | | 8515. | படம் கொள் பாம்பு-அணை துறந்தவற்கு இளையவன், பகழி, விடம் கொள் வெள்ளத்தின்மேலன வருவன விலக்கி, |
|
|
|