| இடங்கர்ஏறு அன எறுழ் வலி அரக்கன் தேர் ஈர்க்கும் மடங்கல் ஐ-இரு நூற்றையும் கூற்றின்வாய் மடுத்தான். |
படம் கொள் பாம்பு அணை துறந்தவற்கு இளையவன் - படத்தினைக் கொண்ட (ஆதிசேடன் என்ற) பாம்புப் படுக்கையை விட்டு (த்தசரதன் மகனாக) அவதரித்த (திருமாலாகிய) இராமனுடைய தம்பி இலக்குவன்; வெள்ளத்தின் மேலன வருவன - வெள்ளத்தினும் அதிகமாக வருவனவாகிய; விடங் கொள் பகழி விலக்கி - விடத்தைக் தன்னிடம் கொண்ட அம்புகளைத் தடுத்து; எறுழ் வலி அரக்கன் தேர் - மிக்க வலிமையுடைய அரக்கனாகிய இந்திரசித்தன் தேரினை; இடங்கர் ஏறு என ஈர்க்கும் - (குருதி வெள்ளத்தில்) ஆண் முதலையினை ஒத்து இழுத்துச் செல்லும்; மடங்கல் ஐ-இருநூற்றையும் கூற்றின்வாய் மடுத்தான் - சிங்கங்கள் ஆயிரத்தையும் கூற்றுவன் வாயுட் புகுமாறு கொன்றொழித்தான். |
(75) |
| 8516. | தேர் அழிந்திட, சேமத் தேர் பிறிது இலன், செறிந்த ஊர் அழிந்திடத் தனி நின்ற கதிரவன் ஒத்தான்; ‘பார் அழிந்தது, குரங்கு எனும் பெயர்’ எனப் பகைத்த சூர் அழிந்திடத் துரந்தனச் சுடு சரம் சொரிந்தான். |
தேர் அழிந்திட சேமத்தேர் பிறி்து இலன் - (தன்) தேர் அழிந்து பட (ஏறுதற்கு) சேமத்தேர் பிறிதொன்றும் இல்லாதவனாகிய இந்திரசித்து; செறிந்த ஊர் அழிந்திடத் தனிநின்ற கதிரவன் ஒத்தான் - நெருங்கியமைந்த ஊர்கோள் அழிந்து மறையத் தனித்து நின்ற கதிரவனை ஒத்துத் தோன்றியவனாய்; பார் அழிந்தது, குரங்கு எனும் பெயர் என - பூமியின் கண் குரங்கு என்னும் (இனமேயன்றிப்) பெயரும் அழிந்தொழிந்தது என்னும் படியாக; பகைத்த சூர் அழிந்திடத் துரந்து அனச் சுடுகரம் சொரிந்தான் - பகை கொண்டு எதிர்த்த சூரபதுமன் அழியும் படியாக (முருகப்பெருமானால்) ஏவப்பெற்ற வேற்படையினை ஒத்த சுட்டழிக்குந்தன்மை வாய்ந்த அம்புகளை (வானரப் படைமீது) பொழிந்தான். |
(76) |