அற்ற தேர்மிசை நின்று போர் அங்கதன் அலங்கல் கொற்றத் தோளினும், இலக்குவன் புயத்தினும், குளித்து முற்ற, எண் இலா முரண் கணை தூர்த்தனன்; முரண் போர், ஒற்றைச் சங்கு எடுத்து ஊதினான், உலகு எலாம் உலைய.
அற்ற தேர்மிசை நின்று - (இந்திரசித்து) அறுபட்டுச் சிதைந்த (தன்) தேரின்மேல் நின்று; போர் அங்கதன் அலங்கல் கொற்றத்தோளினும் - போர் வலி மிக்க அங்கதனுடைய மாலையணிந்த வெற்றிபொருந்திய தோளின் மேலும்; இலக்குவன் புயத்தினும் குளித்து முற்ற - இலக்குவன் தோளிலும் அழுந்தி நிறையுமாறு; எண் இலாமுரண்கணை தூர்த்தனன் - அளவில்லாத வலிய அம்புகளைச்சொரிந்து நிரப்பினான்; உலகு எலாம் உலைய முரண்போர் ஒற்றைச்சங்கு எடுத்து ஊதினான் - உலகங்க ளெல்லாம் நடுங்கும்படியாக(தனது) ஒப்பற்ற சங்கினை எடுத்து ஊதினான்.
(77)
சங்கம் ஊதிய தசமுகன் தனி மகன் தரித்த கங்கணத்தொடு கவசமும் மூட்டு அறக் கழல, வெங் கடுங் கணை ஐ-இரண்டு உரும் என வீசி, சி்ங்கஏறு அன்ன இலக்குவன் சிலையை நாண்எறிந்தான்.
சிங்க ஏறு அன்ன இலக்குவன் - ஆண் சிங்கத்தினை ஒத்தஇலக்குவன்; சங்கம் ஊதிய தசமுகன் தனிமகன் தரித்த - (வெற்றிச்)சங்கினை ஊதிய இராவணனின் ஒப்பற்ற மகனாகிய இந்திர சித்துஅணிந்திருந்த; கங்கணத்தொடு கவசமும் மூட்டு அறக் கழல - வீரகங்கணத்துடன் (மார்பிலணிந்த) கவசமும் மூட்டுவாய் விண்டுகழலும்படி; வெங்கடுங்கணை ஐ-இரட்ணடு உரும் என வீசி -வெம்மையும் விரைவும் வாய்ந்த அம்புகள் பத்தினை இடியேறுஎன்னும்படி எய்து; சிலையை நாண் எறிந்தான் - தன் வில்லின்நாணைத் தெறித்துப் பேரொலி எழச் செய்தான்.
(78)