இலக்குவன் வெற்றிக்கு வானரர் ஆர்த்தல் | | 8519. | கண்ட கார் முகில் வண்ணனும், கமலக்கண் கலுழ, துண்ட வெண் பிறை நிலவு என முறுவலும் தோன்ற, அண்டம் உண்ட தன் வாயினால், ‘ஆர்மின்’ என்று அருள, ‘விண்டது அண்டம்’ என்று, உலைந்திட ஆர்த்தனர் வீரர். | கண்ட கார் முகில் வண்ணனும் கமலக்கண் கலுழ - (தம்பியின் போர் வன்மையைக்) கண்ட கருமுகில் வண்ணனாகிய இராமனும், செந்தாமரை போலும் கண்கள் மகிழ்ச்சிக் கண்ணீர் சிந்த; துண்ட வெண் பிறை நிலவு என முறுவலும் தோன்ற - துண்டமாகிய வெள்ளிய பிறைச் சந்திரனது நிலவினைப் போன்று (தன் முகத்தில்) புன்சிரிப்பின் ஒளி தோன்ற! அண்டம் உண்ட தன் வாயினால் ‘ஆர்மின்’ என்று அருள - அண்டத்தை உண்ட தன் வாயினால் (நம் படை வீரர் அனைவரும்) ‘ஆரவாரம் செய்வீர்களாக’ எனப் பணித்தருள; விண்டது அண்டம் என்று உலைந்திட வீரர் ஆர்த்தனர் - ‘இவ்வண்டம் பிளவுற்றது’ என்று உலகத்தார் நடுங்கும்படியாக (வானர) வீரர்கள் (பேரொலியுண்டாக வாய் விட்டு) ஆரவாரித்தார்கள். | (79) | இலக்குவன், அயன்படை தொடப்புக இராமன் தடுத்தல் | | 8520. | கண் இமைப்பதன் முன்பு போய் விசும்பிடைக் கரந்தான்; அண்ணல், மற்றவன் ஆக்கை கண்டறிகிலன் ஆகி, பண்ணவற்கு, ‘இவன் பிழைக்குமேல், படுக்கும் நம் படையை; எண்ணம்மற்று இலை; அயன் படை தொடுப்பென்’ என்று இசைத்தான். | கண் இமைப்பதன் முன்பு போய் விசும்பிடைக் கரந்தான் - (அப்பொழுது இந்திரசித்து) கண்ணிமைக்கும் நேரமாகிய நொடிப் பொழுதிற்கு முன்பே விரைந்து சென்று ஆகாயத்தில் மறைந்தான்; அண்ணல், மற்றவன் ஆக்கை கண்டறிகிலன் - (அதனை உணர்ந்த) பெருமை சான்றவனாகிய இலக்குவன், அவ்விந்திரசித்தின் |
|
|
|