இந்திரனது புகழுக்குக் காரணமான நல்வினைப் பயனை முற்றும் துடைத்த என் தம்பியே; யான் உன்னை இவ் உரையும் கேட்டேனோ - நான் உன்னைப் பற்றி இவ்வாறான சொற்களைக் கேட்கும்படி ஆனேனே.
|
தம்பியோ, தும்பியோ, நம்பியோ, எம்பியோ ஆகியவை புலம்பல் விளிப் பெயர்களாதலின் ஓகாரம் பெற்று வந்தன, நாமப் பொறி - புகழுக்குக் காரணமாகிய நல்வினைப் பயன். தும்பி - யானை கேட்டேனோ - ஓகாரம் இரக்கம் குறித்து வந்தது.
|
(78)
|
| 7710. | ‘மின் இலைய வேலோனே! யான் உன் விழி காணேன். நின் நிலை யாது என்னேன், உயிர் பேணி நிற்கின்றேன்; உன் நிலைமை ஈதுஆயின், ஓடைக்களிறு உந்திப் பொன்னுலகம் மீளப் புகாரோ, புரந்தரனார்?
|
மின் இலைய வேலோனே - ஒளி பொருந்திய இலை வடிவில் அமைந்த வேற்படையை ஏந்தியவனே; யான் உன் விழிகாணேன் - யான் (நீ இறக்கும் போது) உன் அருகிருந்து கண்ணால் சாவைக் காணாதவனானேன்; நின் நிலை யாது என்னேன் - போர்க்களத்தில் உன் நிலை எவ்வாறு உள்ளது என வினவி அறியாதவன் ஆனேன்; உயிர் பேணி நிற்கின்றேன் - மேலும் என் உயிரைப் (பெரிதென மதித்து அதனைப்) பாதுகாத்துக் கொண்டு நிற்கின்றேன்; உன் நிலைமை ஈது ஆயின் - உன்னுடைய நிலை இவ்வாறு இருக்குமானால்; ஓடைக் களிறு உந்தி - நெற்றிப் பட்டமணிந்த (ஐராவதம் என்னும்) யானையைச் செலுத்திக் கொண்டு; புரந்தரனார் பொன்னுலகம் மீளப் புகாரோ - இந்திரன் தன் இந்திரலோகத்துக்கு மீண்டும் புக மாட்டானோ? புகுவன்;.
|
யான் உன் விழி காணேன் - உடன் பிறந்தார் இறக்கும் போது அருகில் இருந்து காண வேண்டும் என்ற பண்பாட்டு மரபு பற்றி வந்தது. நின்நிலை யாது என்னேன் - கும்பகருணனைப் போருக்கு அனுப்பி விட்டுப் போர்க்கள நிலைமையை எண்ணாது மாயா சனகனை வைத்துக் காம வயப்பட்டுத் தான் செய்த செயலை எண்ணி இரங்கிக் கூறியது. ஓடை - நெற்றிப் பட்டம், களிறு - ஐராவதம் என்ற வெள்ளை யானை. பொன்னுலகம் - தேவலோகம், சுவர்க்கம் எனினும் ஆம்.
|
(79) |