வில்லின் செல்வன் - விற்றொழில் வன்மையாகிய செல்வத்தை உடைய இலக்குவன்; அன்னது புரிவென் என்னா - (நீ கூறிய) “அதனையே செய்வேன்” என (அனுமனுக்குக்) கூறி; ஆயிர நாமத்து அண்ணல் தன்னையே வணங்கி வாழ்த்தி - ஆயிரம் திருப்பெயர்களை உடையவனாகிய இறைவனாம் இராமபிரானை வணங்கி, வாழ்த்தி; சரங்களைத் தெரிந்துதாங்கி - அம்புகளைத் தேர்ந்தெடுத்து; பொன்மலை வில்லினான் தன் படைக்கலம் பொருந்தப் பற்றி - பொன்மயமான மேருமலையை வில்லாகக் கொண்ட சிவபெருமானது படைக்கலத்தினைப் பொருந்தும் படி செய்து; மின்னெயிற்று அரக்கர் தம்மேல் ஏவினான் - மின்னலை ஒத்து விளங்கும் ஒளி பொருந்திய பற்களை உடைய அரக்கரின் மீது செலுத்தினான். |
ஆயிரம் நாமத்து அண்ணல் - திருமாலின் அவதாரமான இராமபிரான். பொன்மலை வில்லினான் - மேருவை வில்லாகத் தாங்கிய சிவபெருமான், வில்லின் செல்வன் - இலக்குவன். அனுமன் குறித்தபடி செய்ய முடிவுசெய்த இலக்குவன், இராமபிரானைத் தியானித்து அம்புகளைத் தேர்ந்தெடுத்து அதில் பாசுபத அத்திரத்தினைப் பொருந்தச் செய்து அரக்கரின் மேல் ஏவினான் என்பதாம். சைவ - வைணவ வேறுபாடு உயர்ந்தோரிடம் இல்லை என்ற குறிப்பு இப்பாடலில் அமைந்துள்ளமை உணரத் தக்கது. |
(156) |
| 8597. | முக்கணான் படையை மூட்டி விடுதலும், மூங்கில் காட்டில் புக்கது, ஓர் ஊழித் தீயின், புறத்தின் ஓர் உருவும் போகாது அக் கணத்து எரித்து வீழ்ந்தது, அரக்கர்தம் சேனை; ஆழித் திக்கு எலாம் இருளும் தீர்ந்த; தேவரும் மயக்கம் தீர்ந்தார். |
முக்கணான் படையை மூட்டி விடுதலும் - (இலக்குவன்) சிவபெருமானது படைக்கலத்தைத் தொடுத்துச் செலுத்திய அளவில்; மூங்கில் காட்டில் புக்கது ஓர் ஊழித் தீயின் - மூங்கில் காட்டில் பற்றியதொரு ஊழிக்காலத்தீயினைப் போன்று; புறத்தின் ஓர் உருவும் போகாது - புறத்தே ஒரு பொருளும் தப்பிப் போகாதவாறு; அரக்கர்தம் சேனை அக்கணத்து எரிந்து வீழ்ந்தது - அரக்கர் சேனை அப்பொழுதே எரிந்து வீ்ழ்ந்தது; |