ஆழித்திக்கெலாம் இருளும் தீர்ந்த- கடலை எல்லையாக உடைய திசைகள் அனைத்தும் இருள் நீங்கப்பெற்றன; தேவரும் மயக்கம் தீர்ந்தார் - தேவர்களும் திகைப்பு நீங்கப்பெற்றனர். |
(157) |
| 8598. | தேவர்தம் படையை விட்டான் என்பது சிந்தை செய்யா, மா பெருந் தேரில் நின்ற மகோதரன் மறையப் போனான்; யாவரும் இரிந்தார் எல்லாம், இன மழை கழிய ஆர்த்து, கோ இளங் களிற்றை வந்து கூடினார்; ஆடல் கொண்டார். |
தேவர்தம் படையை விட்டான் - (இலக்குவன்) தேவர்க்குரிய (திறல்மிக்க பாசுபதாத்திரத்தை) படைக்கலத்தை ஏவினான்; என்பது சிந்தை செய்யா - என்பதனை மனத்தில் எண்ணி; மாபெருந்தேரில் நின்ற மகோதரன் - மிகப்பெருந்தேரில் (அனைத்தையும் பார்த்துக்கொண்டு) நின்றவனாகிய மகோதரன்; மறையப் போனான் - (தான்ஏவிய) மாயை மறைந்தொழியத் தானும் அவ்விடத்தைவிட்டுப் போயினன்; யாவரும் இரிந்தார் எல்லாம் - (ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்த நிலையில் போராற்றிய) வானரத்தலைவர் யாவரும் (போரில்) நிலைகுலைந்து ஓடிய எல்லோருடனும்; இனமழை கழிய ஆர்த்து - மேகக் கூட்டங்கள் பின்னிடுமாறு ஆரவாரித்து; கோ இளங்களிற்றை - தலைமைசான்ற இளங்களிறு போன்றவனாகிய இலக்குவனை; வந்து கூடினார் ஆடல் கொண்டார் - வந்து சூழ்ந்தவராய் (மகிழ்ச்சி மிகுதியால்) கூத்தாடத் தொடங்கினார். |
(158) |
| 8599. | யாவர்க்கும் தீது இலாமை கண்டு கண்டு, உவகை ஏற, தேவர்க்கும் தேவன் தம்பி திரு மனத்து ஐயம் தீர்ந்தான்; காவல் போர்க் குரங்கின் சேனைக் கடல் எனக் கலந்து புல்ல, பூ வர்க்கம் இமையோர் தூவ; பொலிந்தனன்; தூதர் போனார். |