இராவணன் காதல் - இராவணனுடைய அன்பிற்குரிய மகன். இங்குக் காதல் என்னும் சொல் ஆகு பெயராய் அன்பு செய்தற்குரிய மகன் என்னும் பொருளை உணர்த்திற்று. அசுவத்தாமன் பாண்டவரைக் கொல்லவேண்டி ஆலமரத்தடியில் வேள்வி செய்தான் என்பதனை, ‘அந்நெடு மாமறை ஆல மரத்திடை அழி சேனை, இன்னுயிர் பெற்றிடும் வகைகொடு மீளவும் இகல்வேனென்று, உன்னி’ (வி.பார.18 ஆம் போர் 102) எனப் பாரதம் கூறும். கூலம் - கரை, எல்லை, இங்கு ஒழுக்கம் என்ற பொருளில் வந்தது. அருமறை ஓதி உலகிற்கு அறவழி காட்ட வேண்டிய வேதியர், இரக்கமென்பதொன்றில்லா அரக்கர்க்குத்துணை நின்று அறத்திற்குப் புறம்பாய் வேள்வி செய்தலின் கூலம் நீங்கிய இராக்கதப் பூசுரர் எனப்பட்டனர். ‘பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’ என்பது வள்ளுவர் வாக்கு. கூலம் நீங்கிய பூசுரர் என்னாது இராக்கதப் பூசரர் என்றதால் அசுர குருவாகிய வெள்ளியைப் போல இவர்கள் அரக்க சாதிப் புரோகிதர் என்பது கருத்து. |