கரிய வெள்ளாட்டு இருங்குருதி - கொம்பு, பல் ஆகியவற்றுடன் கரிய வெள்ளாட்டினது பெருகிய குருதியையும்; வெம்பு வெந்தசை முறையின் இட்டு - வேகக்கூடிய வெவ்விய தசையினையும் முறையாகப் பெய்து; எண்ணெயால் வேட்டான் - எள்ளின் நெய்யைச் சொரிந்து ஓமம் செய்தான். |
காரிஎள் - கரிய எள்; கரிய வெள்ளாடு. காராட்டை - வெள்ளாடு என்பது மங்கல வழக்கு. இருங்குருதி - நிறைந்து பெருகிய இரத்தம். நற்றேவதைக்குப் பூவும், புனலும், பூசனைக்காம்பொருளாகத் துர்தேவதைக்கு உயிர்ப்பலி கொடுத்து உலகோர் வணங்குதல் போல அரக்கனிடம் இருந்த பிரம்மாத்திரத்திற்கு உயிர்ப்பலி இட்டு அதன் அதிதேவதையை வழிபட்டான் என்பதாம். |
தீயவை தீமைபயத்தல் ஒருதலை; இவன் வேள்வியும் அத்தகையதே. கருவியென்பது கருத்தாவின் கருத்தின்படி இயங்குவது. |
(163) |
பிரமாத்திரத்துடன் இந்திரசித்து வானில் மறைந்திடுதல் |
| 8604. | வலம் சுழித்து வந்து எழுந்து எரி, நறு வெறி வயங்கி, நலம் சுரந்தன பெருங் குறி முறைமையின் நல்க, குலம் சுரந்து எழு கொடுமையான், முறையினில் கொண்டே, ‘நிலம் சுரந்து எழு வென்றி’ என்று உம்பரில் நிமிர்ந்தான். |
எரி நறுவெறி வயங்கி வலஞ் சுழித்து வந்து எழுந்து - (வேள்வியின்) தீயானது நறுமணத்துடன் வலது புறமாகச் சுழன்று வந்து மேலெழுந்து; நலம் சுரந்தன பெருங்குறி முறைமையின் நல்க - நன்மையை விளைவிப்பனவாகிய பெரிய அறிகுறிகளை முறைப்படி புலப்படுத்திக்காட்ட; குலம் சுரந்து எழு கொடுமையான் முறையினில் கொண்டே - (அரக்கர்) குலத்தில் ஊற்றெடுத்துப் பெருகும் கொடுமைகட்கெல்லாம் நிலைக்களமான இந்திரசித்து (தீவலம் சுழித்த) அம்முறைமையினை ஆதரவாகக் கொண்டு; ‘நிலம் சுரந்து எழுவென்றி’ என்று உம்பரில் நிமிர்ந்தான் - ‘செருநிலத்தில் வெற்றி பெருகித் தோன்றும்’ என்று (எண்ணயிவனாய்) விசும்பின் மேல் உயர்ந்து சென்றான். |