பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 585

8623.‘பார் படைத்தவன் படைக்கு ஒரு பூசனை படைத்தீர்;
நீர் படக் கடவீர்அலீர்;-வரி சிலை நெடியோன்
பேர் படைத்தவற்கு அடியவர்க்கு அடியரும் பெறுவார்,
வேர் படைத்த வெம் பிறவியில் துவக்குணா, வீடு.
 

வரிசிலை     நெடியோன்  -  வரிந்து  கட்டப்பெற்ற  வில்லினை
உடையோனாகிய  இராமபிரானது;  பேர்படைத்தவர்க்கு  -  பெயரைத்
தரித்தவர்களுக்கு;  அடியவர்க்கு அடியரும்- அடித்தொண்டுபட்டார்க்கு
அடியவராயினாரும்; வேர்படைத்த வெம்பிறவியில் -   (வினையாகிய)
வேரூன்றிட  வெம்மையான பிறவியினால்;  துவக்குணா வீடு  பெறுவர்
- பிணிக்கப்படாது,  வீடு  பேற்றினைப் பெறுவர்; (என்றால்);   நீர்படக்
கடவீர்   அலீர் 
 -  (இராமபிரானது   சேவையிலிருக்கின்ற)   நீங்கள்
(இங்ஙனம்   அகாலமாக)    இறக்கும்    தன்மை   உள்ளவர்களல்லீர்;
பார்படைத்தவன் படைக்கு - இவ்வுலகைப் படைத்த பிரமதேவனுடைய
பாடையாகிய   பிரமாத்திரத்திற்கு;    ஒரு   பூசனை    படைத்தீர் -
செய்யத்தக்கதொரு   வழிபாட்டினைச்   செய்தவராய்  (நும்  உடம்பைத்
துறந்து) இவ்விடம் வந்தீர்கள்!
 

                                                 (183)
 

8624.‘நங்கள் காரியம் இயற்றுவான் உலகிடை நடந்தீர்;
உங்கள் ஆர் உயிர் எம் உயிர்; உடல் பிறிது உற்றீர்;
செங் கண் நாயகற்காக வெங் களத்து உயிர் தீர்ந்தீர்;
எங்கள் நாயகர் நீங்கள்’ என்று இமையவர் இசைத்தார்.
 

‘நங்கள்     காரியம் இயற்றுவான் - (தேவர்களாகிய) நம்முடைய
செயல்களை  நிறைவேற்றுதற்காக;  உலகிடை  நடந்தீர்  - நிலவுலகில்
சென்று  பிறந்தீர்கள்; உங்கள் ஆர் உயிர் எம் உயிர் - உங்களுடைய
அரிய  உயிர்  எம்முடைய  உயிரே;  உயிர்  பிறிது உற்றீர் - உடம்பு
(மட்டும்)   வேறாகப்   பெற்றுள்ளீர்கள்;   செங்கண்  நாயகற்காக  -
(தாமரைபோலும்)   சிவந்த  கண்களை உடைய  இராமபிரான்பொருட்டு;
வெங்களத்து உயிர் தீர்ந்தீர் - கொடுமை மிக்க போர்க்களத்தில் உயிர்
நீங்கப்  பெற்றீர்;   எங்கள்  நாயகர் நீங்கள்’ - எம்முடைய இறைவர்
நீங்களே;   என்று   இமையவர்  இசைத்தார்  -  என்று  தேவர்கள்
(வானரவீரரைப்) புகழ்ந்து பாராட்டினர்.
 

                                                 (184)