பக்கம் எண் :

மாயா சனகப் படலம் 59

ஏழை மகளிர் அடிவருட - பணிப் பெண்கள் காலைப் பிடிக்க;
ஈர்ந்தென்றல் வாழும் மணி அரங்கில் - குளிர்ந்த தென்றல் காற்று
வாழ்ந்து வீசுகிற அழகிய பள்ளி அரங்கில்; பூம்பள்ளி வைகுவாய் -
அழகிய (மெல்லிய) படுக்கையில் படுத்திருந்தவனே! போர்க்களத்தே -
போர்க்களத்தின் கண்; சூழும் அலகை - சூழ்ந்துள்ள பேய்கள்;
துணங்கைப் பறை துவப்ப - துணங்கைக் கூத்துப் பறை போல் ஒலி
எழுப்ப; பூழி அணை மேல் துயின்றனையோ - புழுதிப் படுக்கை
(மேல்) படுத்து உறங்கினாயோ.

மலரணையில் துயின்றவன் புழுதிப் படுக்கையில் உறங்கும்படி
நேர்ந்த நிலை மாறிய தன்மையை இப்பாடல் விளக்குகிறது. ஏழை -
அறியாமை உடைய எனினும் ஆம். ஈர் - குளிர்ச்சி. அலகை - பேய்,
துணங்கை - கை கோத்து ஆடும் ஒருவகைக் கூத்து. பூழி - புழுதி.
ஈர்ந் தென்றல் - பண்புத் தொகை. ஓகாரம் - இரக்கப் பொருளைக்
குறித்து வந்தது.

(85)

7717.‘செந் தேன் பருகித் திசை திசையும் நீ வாழ,
உய்ந்தேன்; இனி, இன்று நானும் உனக்கு ஆவி
தந்தேன், பிரியேன், தனி போகத் தாழ்க்கிலேன்,
வந்தேன் தொடர; மதக் களிறே! வந்தேனால்,’

மதக் களிறே - மதம் கொண்ட யானை போன்றவனே! செந்தேன்
பருகித்
- சிவந்த நிறமுள்ள மதுவை உண்டு; திசை திசையும் நீ வாழ
- பல திசைகளிலும் சென்று நீ (வெற்றி பெற்றுச் சிறந்து) வாழ,
உய்ந்தேன் - (நான் பாதுகாப்பாக) வாழ்ந்திருந்தேன்; இனி இன்று
நானும் உனக்கு ஆவி தந்தேன்
- இனிமேல் இப்பொழுது நானும்
உனக்காக உயிரைத் தந்தவனாகிப்; பிரியேன் - பிரியாமல்; தொடர
வந்தேன்
- உன்னைத் தொடர்ந்து வந்திட்டேன்; தனிப்போகத்
தாழ்க்கிலேன் வந்தேனால்
- (நீ) தனியே செல்லக் காலம்
தாழ்த்தாதவனாய் வந்து விடுகிறேன்.

இவ்வாற்றாமைப் பாடல்கள் இராவணன் தம்பி மீது கொண்டிருந்த
அளப்பரிய பாசத்தையும் நம்பிக்கையையும் விளக்கிக் காட்டுவனவாய்
உள்ளன. தந்தேன், வந்தேன் - விரைவு காரணமாக எதிர்காலம் இறந்த
காலமாகக் கூறப்பட்ட கால வழுவமைதிகள். நானும் - உம்மை
இறந்தது தழீஇய எச்ச உம்மை, ஆல் - தேற்றப் பொருளில் வந்த
இடைச் சொல்.

(86)