| 8652. | ‘மாண்டோய் நீயோ; யான் ஒருபோதும் உயிர் வாழேன்; ஆண்டான் அல்லன் நானிலம், அந்தோ, பரதன்தான்! பூண்டார் எல்லாம் பொன்றுவர், துன்பப் பொறையாற்றார்; வேண்டாவோ, நான் நல் அறம் அஞ்சி, மெலிவுற்றால்? | நீயோ மாண்டாய் - (என் ஆருயிர்த் தம்பியாகிய) நீயோ இறந்துவிட்டாய்; யான் ஒருபோதும் உயிர் வாழேன் -(நீயின்றி) நான் (இனி) ஒரு கணமும் உயிருடன் வாழமாட்டேன்; பரதன் நானிலம் ஆண்டான் அல்லன் - (என்னைப் பிரிந்து) பரதனும் இவ்வுலகத்தை ஆளமாட்டான்; பூண்டார் எல்லாம் - (நம்மோடு அன்பின் தொடர்பினைப் பூண்டவர்கள் எல்லோரும்; துன்பப்பொறை ஆற்றார் பொன்றுவர் - (பிரிவுத்) துன்பத்தைப் பொறுக்கும் வலியற்றவராய் இறந்துபடுவர்; நான் நல் அறம் அஞ்சி மெலிவுற்றால் - நான் நன்மையுடைய அறத்துக்குப் பயந்து (பகைவரை அழிப்பதில்) தளர்ச்சியுற்றால்; வேண்டாவோ? - (அதன்பயனாக) இத்தனை துயரங்களும் வேண்டத் தக்கன அல்லவோ? | இத்தனை கேடுகளும் நிகழ்வதற்குக் காரணமாய் அமைந்தது இந்திரசித்தன் மேல் பிரமாத்திரத்தை விடுவதற்கு நீ முற்பட்ட பொழுது அறநெறிக்கு அஞ்சி அதனை அவன் மேல் விடாதபடி தடுத்த எனது செயல் மெலிவே ஆதலால், அவ்வாறு அறத்திற்கு அஞ்சியமைந்த எனது தளர்ச்சியே உன் உயிர்க்கும் நண்பர்களுயிர்க்கும் தீங்காய் முடிந்ததாதலின் அதன் பயனாக இத்தனைத் துயரங்களையும் யான் அடைதற்குரியவனாயினேன் என்பான், ‘நான் நல்லறம் அஞ்சி மெலிவுற்றால் (இத்தனையும்) வேண்டாவோ’ என இரங்கிக் கூறுகின்றான் இராமன். | (212) | | 8653. | ‘அறம், தாய், தந்தை, சுற்றமும், மற்றும், எனை அல்லால், துறந்தாய்! என்றும் என்னை மறாதாய்! துணை வந்து பிறந்தாய்! என்னைப் பின்பு தொடர்ந்தாய்! பிரிவு அற்றாய்! இறந்தாய்! உன்னைக் கண்டும் இருந்தேன், எளியேனோ? |
|
|
|