ஒழுகுதலையின்றி; அடியோம் செயற்பால என்னை? - நின் அடியோங்களாகிய எங்களாற் செய்யத் தக்கனயாவை உள்ளன? |
உன்னை உள்ளபடி அறியோம் - “உணர்ந்தார்க்கு உணர்வறியோன்” (திருக்கோவை-9) இறைவனின் வியாபகத் தன்மையை அறிய முடியாமை குறித்து ‘உலகை உள்ளதிறம் உள்ளோம்’ எனப்பட்டது. உள்ளோம் - நினைக்கமாட்டோம். |
‘திடவிசும் பெரிவெளி நீர்நில மிவைமிசை படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும் உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன் சுடர்மிகு சுருதியு ளிவையுண்ட சுரனே!’ |
(திருவாய்மொழி - 1-1-7) |
எனவரும் நம்மாழ்வார் திருவாக்கு இங்கு நினைக்கத் தக்கது. சிற்றறிவாகிய உயிர், பரம்பொருளின் முழுமையை அறியவியலாது. எனவே, அப்பரம்பொருள் வகுத்த வழி பிறழாமல் ஒழுகுதலன்றி வேறொன்றும் செயற்கரியதாகும். |
(222) |
8663. | ‘”அரக்கர் குலத்தை வேர் அறுத்து, எம் அல்லல் நீக்கி அருளாய்” என்று இரக்க, எம்மேல் கருணையினால், ஏயா உருவம் இவை எய்தி, புரக்கும் மன்னர் குடிப் பிறந்து, போந்தாய்! அறத்தைப் பொறை தீர்ப்பான், கரக்க நின்றே, நெடு மாயம் எமக்கும் காட்டக்கடவாயோ? |
அரக்கர் குலத்தை வேர் அறுத்து - (இரக்கமற்றவர்களாகிய) அரக்கரினத்தை வேருடன் அறுத்துக் களைந்து; எம் அல்லல் நீக்கி அருளாய் என்று - எம்முடைய துன்பங்களை நீக்கியருள்வாயாக என்று; இரக்க, எம்மேல் கருணையினால் - (யாம் நின்னைக்) குறையிரந்து வேண்ட, எம்மேல் (நீவைத்த) பேரருளால்; ஏயா உருவம் இவை எய்தி - (நினக்கு) பொருந்தாத மானிடவடிவங்களை ஏற்று; அறத்தைப் பொறை தீர்ப்பான் - அறத்தின் (பொறுக்க முடியாத) பாரமாகிய தீமைகளைப் போக்குதற்காக; புரக்கும் மன்னர் குடிப் பிறந்து போந்தாய் - (உலக உயிர்களைக்) காக்கும் மன்னர்குலத்தில் அவதரித்து இங்குவந்தாய்; கரக்க நின்றே நெடுமாயம் - (இவ்வாறு எமது குறை தீர்க்க வந்த நீ நின் இறைமைத் தன்மை) மறைய நின்று நினது நெடிய |