பக்கம் எண் :

614யுத்த காண்டம் 

(முதல்வனாகிய     நீ    முன்னின்று)    முடித்து    வைத்தாலன்றி
(எம்மிடத்து) நிறைவேறுவன அல்ல.
 

அன்பு     - தொடர்புடையார் மாட்டுவிளைவது. அருள் என்பது
அனைத்துயிர்கள் மேலும் செல்லும் கருணை. அன்பு, அருள், ஞானம்
என்பவை   உயிர்   பெறுகின்ற  வளர்  நிலைக்  கூறுகள். இவற்றை
இறைவன் முன்னின்று முடித்துத் தருதல் வேண்டும். தொடர்புடையார்
மாட்டு  ஏற்படும்  அன்பே  அடுத்து அனைத்துயிர்கள்மேல் ஏற்படும்
அருளுக்கு  வித்தாகின்றது.  அருளே ஞானத்திற்கு வழி வகுக்கின்றது.
ஞானம் பதி உணர்வைத் தந்து வீட்டின்பத்தைக் கூட்டுவிக்கின்றது.
 

                                                (226)
 

8667.‘வருவாய் போல வாராதாய்! வந்தாய் என்று மனம் களிப்ப,
வெருவாதிருந்தே  நீ  இடையே  துன்பம்  விளைக்க,
                                   மெலிகின்றோம்;
கரு ஆய் அளிக்கும் களைகண்ணே! நீயே இதனைக்
                                      காவாயேல்,
திரு வாழ் மார்ப! நின் மாயை எம்மால் தீர்க்கத் தீருமோ?’
 

வருவாய்    போல வாராதாய் - (வெளிப்பட) வருவாய் போன்று
தோன்றி  வாராமல்  இருப்பவனே!  வந்தாய் என்று மனம் களிப்ப -
(காணுதற்கு  அரிய  நீ இன்று இராமனாக அவதரித்து)  வந்தாய் என்று
மனமகிழ்ச்சியுறுதலால்;   வெருவாதிருந்தோம்  -  (பகைவர்  செய்யும்
இடர்களுக்குச்  சிறிதும்)  அஞ்சாதிருந்தோம்;  நீ  இடையே  துன்பம்
விளைக்க    மெலிகின்றோம்
  -   (அச்சந்தீர்த்தருளவல்ல)   நீயே
(எம்மகிழ்ச்சியின்)    இடையே    துன்பத்தை    உண்டாக்கினமையால்
மெலிவுற்று   வருந்துவேம்   ஆயினேம்;   கரு   ஆய்  அளிக்கும்
களைகண்ணே!
  -   மூலமாய்   நின்று  எம்மைப்  பாதுகாத்தருளும்
பற்றாகிய    பெருமானே!    நீயே   இதனைக்   காவாயேல்    -
(அருளாளனாகிய)  நீயே   இத்துன்பத்தைக்  களையா தொழிவாயாயின்;
நின்மாயை  எம்மால் தீர்க்கத்  தீருமோ? -  நினது  மாயச் செயல்
(உணர்வற்ற) எங்களால் தீர்க்கத் தீர்ந்தொழியும் எளிமையுடையதோ?
 

"வந்தாய்  போலே வாராதாய், வாராதாய்  போல் வருவானே" என்ற
திருவாய் மொழித்தொடர் (6-10-9) இங்கு ஒப்புக் காணத்தக்கது.
 

                                                (227)