8668. | ‘அம்பரீடற்கு அருளியது, அயனார் மகனுக்கு அளித்ததுவும், எம்பிரானே! எமக்கு இன்று பயந்தாய் என்றே ஏமுறுவேம்; வெம்பு துயரம் நீ உழக்க, வெளி காணாது மெலிகின்றேம்; தம்பி துணைவா! நீ இதனைத் தவிர்த்து, எம் உணர்வைத் தாராயோ?’* | எம்பிரானே!-எம்முடைய இறைவனே! அம்பரீடற்கு அருளியதும் - அம்பரீடன் என்பானுக்கு அருள் புரிந்ததும்; அயனார்மகனுக்கு அளித்ததுவும் - பிரம தேவருயை மகனான உருத்திர மூர்த்திக்கு அருள் வழங்கியதும், (ஆகிய நின் அருளை); எமக்கு இன்று பயந்தாய் என்றே ஏமுறுவேம் - எங்களுக்கும் இப்பொழுது கொடுத்தாய் என்று (நினது) பாதுகாப்பினை நாடி அடைதற்கு உள்ள யாங்கள்; வெம்புதுயரம் நீ உழக்க - மனம் வெதும்புதற்குக் காரணமான துன்பத்தை நீ அடைந்தமையால்; வெளிகாணாது மெலிகின்றேம் - (துன்பஇருளைவிட்டுச் செல்லும்) வழிகாணாது தளர்ந்து வருந்துகின்றோம்;தம்பிதுணைவா! - தம்பிக்கு துணைவனே! நீ இதனைத் தவிர்த்து, எம் உணர்வைத் தாராயோ - நீ (மேற்கொண்டுள்ள) இத்துயரத்தை நீக்கி (உணர்விழந்த) எங்களுக்கு நல்லுணர்வினைத் தந்தருள மாட்டாயா? | ஏமுறுதல் - பாதுகாப்பினை அடைதல், வெம்புதுயரம் - கண்டோர் செய்வதறியாது மனம் வெதும்புதற்குரிய பெருந்துயர். இராமன் இலக்குவன் மீது பேரன்பினன் ஆதலால், இவ்விடம் நோக்கி ‘தம்பி துணைவா’ என அழைக்கப் பெறுகின்றான். | (228) | இராவணனிடம் தூதர், ‘உன்பகை முடிந்தது’ என அறிவித்தல் | 8669. | என்ப பலவும் எடுத்து இயம்பி, இமையாதோரும் இடர்உழந்தார்; அன்பு மிகுதியால், ஐயன் ஆவி உள்ளே அடங்கினான், |
|
|
|