அரக்கர்க்கு இறைவன் ‘என்வந்தது நீர்?’என்று இயம்ப-அரக்கர் வேந்தனாகிய இராவணன் (வந்த தூதர்களை நோக்கி) ‘நீர் வந்தது என்ன காரணம் பற்றி?" என வினவ; நின் மைந்தன் நெடுஞ்சரத்தால் - (அது கேட்ட தூதர்) ‘நின்னுடைய மகன் ஏவிய நெடிய பிரம்மாத்திரத்தால்; துணைவரெல்லாம் நிலம் சேர - தன்னுடைய தோழர்கள் எல்லோரும் நிலத்தில் மடிந்து வீழ; பின் வந்தவனும் முன் மடிந்த பிழையை நோக்கி - தன்பின்னே வந்த தம்பி இலக்குவனும் தனக்கு முன்னே இறக்க நேர்ந்தமைக்குக் காரணமாயமைந்த தனது (காலத்தாழ்வாகிய) பிழையை எண்ணி; பெருந்துயரால் முன் வந்தவனும் முடிந்தான் - பெருந்துயரால் மூத்தோனாகிய இராமனும் இறந்து போனான்; ‘உன்பகைபோய் முடிந்தது’ என மொழிந்தார்- (அதுவே) ‘உனது தீராப் பகையும் அறவே தொலைந்தது’ எனக் கூறினார்கள். |