கணவன் உரு கண்ணால் கண்டாள் - கணவன் உருவைச் சீதை கண்ணால் கண்டாள்; அன்றி ஒன்றும் காணாதாள் - அவ்வுருவத்தை அன்றி வேறு ஒன்றும் காணாதவள் ஆயினாள்; உண்டாள் விடத்தை என - (பின்பு) விடத்தை உண்டவள் போல; உடலும், உணர்வும், உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள் - உடம்பும், உணர்ச்சியும், உயிர்ப்பும் ஒருங்கே ஓயப்பெற்றாள்; தண்டாமரைப் பூ நெருப்புற்ற தன்மை உற்றாள் - குளிர்ந்த தாமரைப்பூ நெருப்பில் வீழ்ந்தாற்போன்றதன்மையை அடைந்தாள்; தரியாதாள் பெண்தான் உற்ற பெரும் பீழை - (பெருந்துயரைத்) தாங்கமாட்டாதவளான சீதை என்னும் பெண் அடைந்த பெருந்துயரம்; உலகுக்கு எல்லாம் பெரிதன்றோ? - உலகங்கள் எல்லாவற்றினும் பெரியதாகும் அன்றோ? |