நினைந்து நின்னைக் காட்டிற்கு அனுப்பிய; கொடுங்கய்கேசி கருத்து மெய்யே இதுவோ? - கொடிய தன்மையளான கைகேசியின் கருத்து உண்மைாகவே இது தானோ? |
‘கைகேசி’ என்பது எதுகை நோக்கி ‘கய்கேசி’ என நின்றது. |
(15) |
8686. | "தகை வான் நகர் நீ தவிர்வாய்" எனவும், வகையாது, தொடர்ந்து, ஒரு மான் முதலா, புகை ஆடிய காடு புகுந்து, உடனே பகை ஆடியவா! பரிவு ஏதும் இலேன்! |
"தகைவான் நகர் நீ தவிர்வாய்" எனவும்-பெருமைசான்ற உயர்ந்த அயோத்தி நகரில் நீ தங்கி இருப்பாயாக" என்று நீ கூறவும்; பரிவு ஏதும் இலேன் - இரக்கம் சிறிதும் இல்லாத நான்; வகையாது தொடர்ந்து - நின்னைப் பிரிந்திராமல் தொடர்ந்து; புகை ஆடிய காடு புகுந்து - புகை மண்டியகானகத்தில் நின்னுடனே புகுந்து; ஒரு மான் முதலா பகை ஆடியவா! - ஒரு மான் காரணமாக நின்னைக் கொல்லும் பகையை உண்டாக்கியவாறு என்னே! |
சீதை தற்பழி நொந்து புலம்பும் இடம் இது. |
(16) |
8687. | "இன்று ஈகிலையேல், இறவு இவ் இடை; மான் அன்று, ஈ" எனவும் பிரிவோடு அடியேன் நின்று ஈவது, நின்னை நெடுஞ் செருவில், கொன்று ஈவது ஓர் தீமை குறித்தலினோ? |
அன்று - அக்காலத்தில்; இன்றுமான் ஈகிலையேல் - இன்று மானைப் பிடித்துக் கொடுக்கவில்லையானால்; இவ்விடை இறவு ஈ எனவும் - இவ்விடத்து எனக்கு இறப்புத்தான்; (ஆதலால்) அம்மானைப் பிடித்துக்கொடு என வேண்டவும்; பிரிவோடு அடியேன் நின்று ஈவது - நிற்பிரிந்து அடியேன் தனித்து நின்றது; நின்னை நெடுஞ் செருவில் கொன்று ஈவது ஓர் தீமை குறித்தலினோ? - நின்னை நெடிய போரில் கொல்வதோர் தீமை நினைத்தலினால் தானோ? |
(17) |
8688. | ‘நெய் ஆர் பெரு வேள்வி நிரப்பி, நெடுஞ் செய் ஆர் புனல் நாடு திருத்துதியால்; |