பக்கம் எண் :

 மாயா சனகப் படலம் 63

இலக்குவருடைய     பச்சை   இரத்தத்தால்,;   எம்பிக்கு   -    என்
தம்பியாகிய  கும்பகருணனுக்கு; முக்கைப் புனல் உகுப்பேன் - மூன்று
முறை   கையால்  இறைத்தல்  ஆகிய  நீர்க்கடன்  செய்வேன்;   என
முனியா
- என்று சினந்து; தீ விழியான் போயினான் - (சினத்தால்) தீ
வெளிப்படும்  கண்களை  உடையவனாய்ச்  சீதை  இருக்கும்  இடத்தை
விட்டு) அப்பால் போனான்.

முக்கைப்   புனல் உகுத்தல். இறந்தவர்க்கு மூன்று முறை கையொலி
நீர்  இறைத்துச்  செய்யும் நீத்தார்கடன். மந்திரியார் -  உடன்  இருந்த
மகோதரனை    மட்டும்   குறித்தது.    இழிப்பினால்    ஒருமையைப்
பன்மையாகக்   கூறினார்   என்க.    முனியா   -  செய்யா  என்னும்
வாய்பாட்டு இறந்த கால உடன்பாட்டு வினை எச்சம்.

                                                  (91)

                                           மகோதரன் போதல்

7723.‘கூறோம், இனி நாம்; அக் கும்பகருணனார்
பாறு ஆடு வெங் களத்துப் பட்டார்’ எனப் பதையா,
‘வேறு ஓர் சிறை இவனை வைம்மின் விரைந்து’ என்ன,
மாறு ஓர் திசை நோக்கிப் போனார், மகோதரனார்.

இனி     நாம்  கூறோம்  -  இனிமேல்  நாம்  (வேறு  ஒன்றும்)
சொல்வதற்கில்லை  (ஏனெனில்);   அக்கும்பகருணனார்  பாறு  ஆடு
வெங்களத்துப்   பட்டார்
  -  அந்தக்  கும்பகருணனார்  பருந்துகள்
பறக்கின்ற கொடிய போர்க்களத்தில் இறந்து அழிந்தார்; எனப் பதையா
-என்று சொல்லி உடல் பதைத்து; இவனை வேறு ஓர் சிறை விரைந்து
வைம்மின்   என்ன
 -  இந்த  மாயாசனகனை  மற்றொரு  சிறையில்
விரைவாக  அடைத்து வையுங்கள் என்று சொல்லிவிட்டு; மகோதரனார்
மாறு ஓர் திசை   நோக்கிப்   போனார்
- மகோதரன் வேறு  ஒரு
திசையை நோக்கிப் போனார்.

மகோதரன்     இராவணனுடன்  செல்லாது  வேறு  ஓரு திசையில்
செல்லுதல்,  தான் கூறியே கும்பகருணனைப்  போருக்கு  அனுப்பியதை
எண்ணி இராவணன் தன் மீது சினந்து சீறுவானோ  என்ற  அச்சத்தால்
என்க. பாறு - பருந்து, மாறு ஓர் திசை - வேறு  ஓரு திசை, பதையா -
செய்யா    என்னும்    வாய்பாட்டு     உடன்பாட்டு    வினைஎச்சம்.
மகோதரனார் - பன்மை இழிவுக்குறிப்பு.

                                                  (92)