எனவும் சொன்னாள் - எனக்கு எளிது; (அரிதன்று) என்றும் சொன்னாள். |
இது முன்பாடலோடு (கம்ப. 7653) பொருத்திக் காணத்தக்கது. |
(31) |
சீதையை மீண்டும் அசோகவனத்திற்குச் செலுத்துதல் |
8702. | தய்யலை, இராமன் மேனி தைத்தவேல் தடங்கணாளை, கய்களின் பற்றிக் கொண்டார், விமானத்தைக் கடாவுகின்றார்,- மெய் உயிர் உலகத்து ஆக, விதியையும் வலித்து, விண்மேல் பொய் உடல் கொண்டு செல்லும் நமனுடைத் தூதர் போன்றார். |
தய்யலை, இராமன் மேனி தைத்தவேல் தடங்கணாளை - கட்டழகுடைய சீதையை, இராமன் மேனியில் பாய்ந்த வேலைப் போன்ற பெரியகண்களை உடையவளை; கய்களில் பற்றிக் காண்டார் விமானத்தைக் கடாவு கின்றார்-தம் கைகளில் பற்றிக்கொண்டு புட்பக விமானத்தைச் செலுத்துகின்ற அரக்கியர்; மெய் உயிர் உலகத்து ஆக விதியையும் வலித்து - உண்மையான உயில் மண்ணுலகத்து ஆக விடுத்து, முன்னை விதியையும் வற்புறுத்தி மாற்றி; விண்மேல் பொய்யுடல் கொண்டு செல்லும் - விண்மேல் பொய்யான உடம்பைக் கொண்டு செல்லுகின்ற; நமனுடைத் தூதர் போன்றார் - எமதூதரைப் போன்றனர். |
‘இராமன் மேனியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த சீதையின் நிலையை விளக்க ‘இராமன் மேனி தைத்த வேல் தடங்கணாளை’ என்றார். விமானம் புறப்பட்டால் இராமன் திருமேனியைப் பிரிய முடியாமல் எங்கே பாய்ந்து விடுவாளோ என்ன அச்சத்தால் அரக்கியர் சீதையைக் கைகளால் பற்றிக்கொள்ளுகின்றனர். |
(32) |