23. மருத்துமலைப் படலம் | பிரமாத்திரத்தினால் வீ்ழ்ந்துபட்டவர்களைச் சாம்பவான் மொழிந்தபடி, அநுமன், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மருந்துகளை உடைய மலையைக் கொண்டுவந்து உயிர்ப்பித்த பின்னர், மீண்டும் அதனைக் கொண்டு சென்று வைத்த நிகழ்ச்சியைக் கூறுகின்ற பகுதியாகலின் இது மருத்துமலைப் படலம் எனப்பட்டது. | இப்படலப்பெயர் சுவடிகளில், “மருத்துமாமலைப்படலம்” எனவும், “மருத்துப்படலம்” எனவும், “மருத்துவப்படலம் எனவும், ‘மருந்துப்படலம்’ எனவும் வேறுபடக் காணப்படுகின்றது. | இராமன் கட்டளைப்படி படைஞர்க்கு உணவுதேடி வந்த வீடணன் போர்க்களக்காட்சியைக் கண்டு துயருறுகின்றான். பின்பு தெளிந்து அனுமனைத் தேடிக் கண்டு, அவனை மூர்ச்சை தெளிவிக்கின்றான். இருவரும் சாம்பவானைத் தேடிக் காண்கின்றனர். சாம்பவான் மொழிப்படி அனுமன் மருந்து கொண்டு வரச் சென்று பலவித அனுபவங்களைப் பெற்று மருந்து மலையையே கொண்டுவந்து விடுகின்றான். போர்க்களத்தின் மேலதாக மருந்து மலைவந்தவுடன் அதன் காற்றுப்பட்ட அளவில் அனைவரும் உயிர்பெற்றெழுகின்றனர் அனுமன் மீண்டும் அம்மலையினை அதன் இருப்பிடத்திலேயே கொண்டு சென்று வைத்துவிட்டு வருகின்றான். இராமனாதியர் மகிழ்கின்றனர். போர்க்களத்திலிருந்த அரக்கர்பிணங்களை மருத்தனைக் கொண்டு இராவணன் அப்புறப்படுத்திக் கடலில் போட்டுவிட்டதால் அவர்கள் பிழைக்க வழியின்றிப் போய் விடுகின்றது. இச்செய்திகள் இப்படலத்துக் கூறப்படுகின்றன. | உணவுகொணர்ந்து, பாசறையில் சேர்த்த வீடணன் களங்கண்டு மயங்கி வீழ்தல் | 8703. | போயினள் தையல்; இப்பால், ‘புரிக’ எனப் புலவர் கோமான் ஏயின கருமம் நோக்கி, எய்திய இலங்கை வேந்தன், மேயின உணவு கொண்டு, மீண்டு, அவை உறையுள் விட்ட ஆயின ஆக்கி, தான் வந்து, அமர்ப் பெருங் களத்தன் ஆனான்.
|
|
|
|