பக்கம் எண் :

 மருத்துமலைப் படலம் 641

லின்றி  நிற்கின்றன; என்றும்    உளதென்றாலும் -    இப்படிப்பட்ட
தொடர்பு   (உடலுயிர்   ஆகியன  அன்பு  தோன்றி   விளங்குதற்குக்
காரணமாய்   முன்தோன்றுவதும்,  பின்பு,  அன்பு  அவை    மாட்டுத்
தோன்றி  விளங்குவது மாகிய தொடர்பு) என்றும் உள்ள   தென்றாலும்;
முழுவதும்  தெரிந்தவாற்றால் - முழுவதுமாக ஆராய்ந்து  பார்த்தால்;
அன்பு என்பது ஒன்றின் தன்மை - அன்பு என்பதாகிய ஒன்றனுடைய
(உடலுயிர்        ஆகியவற்றைத்       தளிர்ப்பச்        செய்தலும்,
சிதைப்பச்செய்தலுமாகிய)   இருவேறுபட்ட  தன்மையினை;   அமரரும்
அறிந்ததன்றே
- தேவர்களும் அறிந்தவர் களல்லவே?
 

இப்படாலின்     கருத்தை,      “அன்போடியைந்த   வழக்கென்ப
வாருயிர்க்கென்போடியைந்த  தொடர்பு”   (குறள்-73)   என்னும்  குறள்
வழி நின்று காணுதல் வேண்டும்.
 

பிறவி      என்பது  உடலும்  உயிரும் இணைதலாம். அறிவற்றதும்
மாயாகாரியமுமாகிய    உடம்பு    என்னும்   பருப்பொருளை,  அறிவு
வடிவானதும்,  அருவமானதுமான   உயிர் இயைந்திருப்பது அருளார்ந்த
அறிவு     வெளியாக      இருக்கின்ற     இறைவனை    அடைந்து
அனுபவித்தற்காகும்.  இதற்குப்    பிறவிதோறும் உடம்போடு கூடி உயிர்
அன்பினைப்   பெருக்கிக்     கொண்டு   அருள்  நிலைக்கு  உயர்தல்
வேண்டியிருக்கின்றது.  எனவே, அன்பு   தோன்றி விளக்கம் பெறுதற்கு
உடலோடு   உயிர்   இயைதல்   தேவையாகின்றது.  உடலோடு  உயிர்
இனணந்த  பின்பேதான் அன்பு   தோன்றி விளக்கம் பெறுதல் முடியும்.
எனவேதான்   “என்பு  என்பது,  யாக்கை   என்பது,  உயிர்  என்பது
இவைகள்  எல்லாம்  அன்பிற்குப்   பின்பு   அல்ல  முன்பு” என்றார்.
மேலும்  இவை  இந்நிலையினின்றும்  மாறுதலின்றித்    தொடர்கின்றன
என்பதும் வெளிப்படை.
 

உடலும்     உயிரும்  சேர்ந்தவழி  தோன்றிச்  சிறக்கின்ற  அன்பு
அன்பிற்குரியார்  அருள்    செய்த  போது அவ்வுடலுயிர்கள் இன்புறும்
வண்ணம் தளிர்ப்பதும்;  அங்ஙனமின்றி  அவ்வன்பிற்குரியார்  பிரிகின்ற
காலத்து      அவ்வுடலுயிர்கள்      சிதைவுபெற்றழிய    அவ்வன்பே
காரணமாதலும் காணுகின்றோம்.  எனவே  அன்பு, தளிர்ப்பச் செய்தலும்
சிதைப்பச்         செய்தலுமாகிய       இருகூறுகளை       உடைய
தன்மையுடைத்தாகின்றது.    இதனை,  “அன்புற்றமர்ந்த    வழக்கென்ப
வையகத்து  இன்புற்றார் எய்தும் சிறப்பு” (குறள்-75) என்ற  குறள்  வழி
உணரலாம்.
 

அன்பு,     உடலுயிர்   இணைவிற்குப்  பின்பு அவற்றிடத்து நின்று
தோன்றினும்  அவை  மென்மேலும்   இன்புற்றுச்    சிறக்கவோ அன்றி
அவை  இரண்டும்  தனிப்பட்டுப்  பிரியவோ அதுவே காரணமாகின்றது.
நுணுகி  ஆராய்ந்து  பார்த்தால்   இவ்வுண்மை   புலப்படும். இதனைத்
தேவர்களும் உணரார்கள் என்கின்றார் கவி.
 

                                                 (4)